பிட்ஜ் ரேட்டிங்கினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்திற்கு மத்திய வங்கி அதன் வலுவான ஆட்சேபனையினைத் தெரிவித்துக் கொள்கிறது

சனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள், அதனைத் தொடர்ந்து மேதகு சனாதிபதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை மற்றும் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற முக்கிய நியமனங்கள் என்பனவற்றிற்கான சாதகமான சந்தைப் பதிலிறுப்புக்களுக்கு முற்றுமுழுதாக மாறான தன்மையினை எடுத்துக்காட்டும் விதத்தில் “இலங்கையின் தேர்தல் பெறுபேறு கொள்கையின் நிச்சயமற்ற தன்மையினை அதிகரிக்கிறது” என்ற மகுடத்தின் கீழ் 2019 நவெம்பர் 21ஆம் திகதி பிட்ஜ் ரேட்டிங்கினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மத்திய வங்கி அதன் வலுவான ஆட்சேபனையினைத் தெரிவித்துக்கொள்கிறது.

உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை, அதேபோன்று படுகடன் மற்றும் பங்குரிமை மூலதனச் சந்தைகள் என்பன தேர்தல் பெறுபேறுகளுக்குச் சாதகமான விதத்தில் பதிலிறுத்திருக்கின்றன. தேர்தல் முடிவடைந்ததிலிருந்து நான்கு நாள் காலப்பகுதியில் இலங்கை ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக ஒரு ரூபாவினால் உயர்வடைந்திருக்கிறது. இக்காலப்பகுதியில், முன்னோக்கிய செலாவணி அமைப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது ரூபா மேலும் உயர்வடையும் என்ற எதிர்பார்ப்பினை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. அரச பிணையங்கள் சந்தையில், 2019 நவெம்பர் 20ஆம் நாள் நடத்தப்பட்ட திறைசேரி உண்டியல்களுக்கான ஏலங்களில் முதலாந்தரச் சந்தை விளைவுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்த வேளையில் இரண்டாந்தரச் சந்தை விளைவு வீதங்களும் விளைவு வளையிக்கு குறுக்கே குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றினைக் கொண்டிருந்தன. அதேவேளை, நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின்  விளைவுகளும் இவ்வியாபார வாரத்தின் ஆரம்பத்தில் இதே நடத்தையினைக் கொண்டிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரச பிணையங்களில் குறிப்பிட்ட தொகையிலான நிதிகளை முதலீடு செய்திருக்கின்றனர். மேலும், கடந்த ஒரு சில நாட்களாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்திருக்கிறது. இச்சாதகமான சந்தைப் போக்குகளை, பிட்ஜ் ரேட்டிங்கினால் விடுக்கப்பட்ட அறிக்கை கவனத்தில் கொள்ளாமல் விட்டிருப்பது கணிசமானதொரு தவறாகும். 

அரசாங்கம் தற்பொழுது தான் உருவாக்கப்பட்டு வருவதனால், புதிய அரசாங்கத்தின் மிகச் சரியான கொள்கைப் பாதை பற்றியும் அதன் சாத்தியமான பெறுபேறுகள் பற்றியதுமான கருத்துக்கள் தொடர்பில் ஏதேனும் ஆய்வுகளைத் தெரிவிப்பது முதிர்ச்சியற்ற ஒரு விடயமாக இருக்குமென மத்திய வங்கி கருதுகிறது. நிச்சயமற்ற அரசியல் நிலைமைகள் மறைந்து விடும் பொழுது மேலே குறிப்பிடப்பட்ட சாதகமான சந்தை மனோபாவங்கள் எதிர்வரும் காலத்தில் மேலும் வலுவடையும் போல் தெரிகிறது. இதுவரை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப வழிமுறைகள், புதிய நிருவாகத்தில் தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் வலுவான ஆளுகை அமைப்பினைப் பேணுவதற்கான மேதகு சனாதிபதியின் மனவுறுதியை எடுத்துக்காட்டுவனவாகவுள்ளன.

இதன்படி, முற்றுமுழுதாக பலயீனமான எடுகோள்களினை அடிப்படையாகக் கொண்டு பிட்ஜ் ரேட்டிங்கினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கம் குறிப்பாக, உண்மையான சந்தை அபிவிருத்திகள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு பெருமளவிற்கு மாறாகக் காணப்படுவதனால் இதனை அங்கீகரிக்க முடியாது.

Published Date: 

Thursday, November 21, 2019