த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ், உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2018இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது. வாய்ப்புக்களைக் கொண்ட முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீளமைப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அத்தகைய முயற்சிகள் திருப்திகரமான மட்டத்தில் இன்னமும் வெற்றியளிக்கவில்லை. 

த பினான்ஸ் கம்பனியின் பலயீனமான நிதியியல் செயலாற்றங்களை பரிசீலனையில் கொண்ட இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலவுரித்துக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 2019 பெப்புருவரி 15ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்விதத்தில், பல்வேறு ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் மீளமைத்தல் செயன்முறைகளுக்கு வசதியளிப்பதற்காக, ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்தல், வைப்புக்களை எடுப்பனவு செய்தல், கடன்கள் மற்றும் முற்பணங்களை பகிர்ந்தளித்தல் இடைநிறுத்துதல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தன. ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கையின் பிரதான குறிக்கோள் நியாயமானதொரு காலப்பகுதிக்குள் த பினான்ஸ் கம்பனிக்காக வாய்ப்புக்களைக் கொண்ட முதலீட்டாளர் ஒருவரை இனங்காண்பதாக இருந்தது. எனினும், கம்பனியை மீளெழுச்சிப்படுத்துவதற்கான ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு முதலீட்டாளரை இன்றுவரை த பினான்ஸ் கம்பனியினால் கண்டறியமுடியாமல் இருக்கிறது. 

த பினான்ஸ் கம்பனியின் மீளெழுச்சியானது கம்பனியின் பங்குரிமை மூலதனத்தில் முதலீடு செய்ய விரும்புகின்ற ஏற்றுக்கொள்ளத்தக்க முதலீட்டாளர் ஒருவர் கிடைப்பதிலேயே முழுமையாகத் தங்கியிருக்கின்றது என்பதனை விளங்கிக் கொள்வது மிக முக்கியமானதொரு விடயமாகும். இதற்கமைய, நாணயச் சபை வாய்ப்பினைக் கொண்ட முதலீட்டாளரிடமிருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள் அழைப்பினை பெறுவதற்கும் அத்தகைய முதலீட்டாளர்களிடமிருந்து த பினான்ஸ் கம்பனியை மீளெழுச்சிப்படுத்துவதற்கான அவர்களது வியாபார மீளமைத்தல் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு அத்தகைய முதலீட்டாளர்களைக் கோருமாறும் த பினான்ஸ் கம்பனியை அறிவுறுத்தியது. எனினும், த பினான்ஸ் கம்பனி கிடைக்கத்தக்க நிதிகளுக்கான சான்றுகளுடன் நம்பகமான எந்தவொரு முதலீட்டாளரிடமிருந்தும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆர்வத்தினை வெளிப்படுத்தும் அழைப்பினைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. கம்பனி மாதாந்தம் ஏறத்தாழ ரூ.200 மில்லியன் இழப்பினை அடைந்து வருவதனை இங்கு குறிப்பிடுவது முக்கியமானதாகும். எனவே, இத்தகைய விதத்தில் கம்பனி தொழிற்படுவது வைப்பாளர்களதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலவுரித்துக்களை மேலும் பாதிப்பதாக அமையும் என்பது வெளிப்படையானதாகும். 

இதன்படி, வைப்பாளர்களினதும் ஏனைய கடன் வழங்கியோரினதும் நலவுரித்துக்களைப் பாதுகாப்பதற்காக நிதித்தொழில் சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் நியதிகளில் நாணயச் சபை 2019 ஒத்தோபர் 23ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் த பினான்ஸ் கம்பனிக்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச்செய்வது பற்றிய அறிவித்தலினை விடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. எந்தவொரு நம்பகமான முதலீட்டாளரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆர்வத்தை வெளிப்படுத்தலுடன் மூலதன உள்ளீட்டிற்கான நிதியத்திற்கான ஆதாரங்களுடன் சேர்த்து வியாபார மீளமைத்தல் திட்டத்தினை த பினான்ஸ் கம்பனியினதும் இலங்கை மத்திய வங்கியினதும் பரிசீலனைக்காக இன்னமும் சமர்ப்பிக்க முடியும்.

வைப்புக்களுக்கான சேரவேண்டிய வட்டி இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைகளுக்கமைவாக வைப்பாளர்களுக்கு தொடர்ச்சியாகக் கொடுப்பனவு செய்யப்படும். அதேநேரம், கம்பனியின் அனைத்து கடன்பாட்டாளர்களும் அவர்களது நிலுவைகளை செலுத்துமாறு கடுமையாக ஆலோசனை வழங்கப்படுகிறார்கள். அத்தகைய கடன்பாட்டாளர்கள் அவர்களது நிலுவைகளை த பினான்ஸ் கம்பனியினால் குறித்துரைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளினூடாக அல்லது அண்மையிலுள்ள த பினான்ஸ் கம்பனியின் கிளைகளினூடாக செலுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள். அவர்கள் செய்த மீள்கொடுப்பனவுகளுக்கான பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதனை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

வைப்புக்காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டம் என்பன அனைத்து வைப்பாளர்களினதும் நலவுரித்துக்களை வைப்பாளர் ஒருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 கொண்ட தொகைக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற உண்மையின் மீது கவனம் ஈர்க்கப்படுகின்றது. இது வைப்பாளர்களில் 94 சதவீதத்தினரை முழுமையாக உள்ளடக்கும். ஆகவே, வைப்பாளர்கள் இலங்கை மத்திய வங்கியுடன் ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

மேலதிக விளக்கங்களுக்கு, வைப்பாளர்கள் 011 2477573, 011 2477229, 011 2398646, 011 2398733 அல்லது 011 2477504 என்ற தொலைபேசி இலக்கங்களிலும் snbfi_query@cbsl.lk மின்னஞ்சல் முகவரியிலும் மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தினை தொடர்பு கொள்ளலாம். 

Published Date: 

Wednesday, October 23, 2019