நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு சாம்பல் நிறப்பட்டியலிலிருந்து இலங்கையை நீக்கியிருக்கிறது

பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான உலகளாவிய கொள்கை வகுப்பாளரான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, அதன் இணங்குவிப்பு ஆவணத்திலிருந்தும் அதாவது “சாம்பல் நிறப்பட்டியல்” என பொதுவாக அடையாளம் காணப்படும் ஆவணத்திலிருந்து இலங்கையை நீக்கியிருக்கிறது. இத்தீர்மானமானது 2019 ஒத்தோபர் 13 - 18 காலப்பகுதியில் பாரிஸில் நடைபெற்ற நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் முழுநிறைவான சமவாயத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

2016 ஒத்தோபரில், நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, நாட்டில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பான காத்திரமான முன்னேற்றங்களை மதிப்பிடுவது, நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் பன்னாட்டு ஒத்துழைப்பு மீளாய்வுக் குழுவின் மீளாய்வுக்குட்பட்டிருக்கும் என்பதனை இலங்கைக்கு அறிவித்தது. அநேக கலந்துரையாடல்கள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளின் பின்னர், நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, இலங்கை பன்னாட்டு ஒத்துழைப்பு, மேற்பார்வை, சட்ட ஆட்கள் மற்றும் ஏற்பாடுகள் மற்றும் ஆயுதப் பெருக்கங்கள் மீதான (வடகொரியா மற்றும் ஈரான்) இலக்கிடப்பட்ட நிதியியல் தடைகள் ஆகிய நான்கு துறைகளில் போதுமான முன்னேற்றத்தினை அடையவில்லை என்பதனை எடுத்துக்காட்டியது. இதன் விளைவாக, நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு, 2017 ஒத்தோபரில் நடைபெற்ற அதன் முழுநிறைவான சமவாயத்தில் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் இணங்குவிப்பு ஆவணத்தில் பணம் தூயதாக்கலைத் தடைசெய்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் உபாயத்தில் குறைபாடுகளைக் கொண்ட நியாயாதிக்கமொன்றாக இலங்கையினை பட்டியலிட்டதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக நேரக் கட்டமைப்புடன் கூடிய நடவடிக்கைத் திட்டமொன்றினையும் வழங்கியது. அவ்வாறு பட்டியலிடப்பட்டதனைத் தொடர்ந்தும் பின்னர் நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றைய ஆர்வலர்களுடன் இணைந்து நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் நடவடிக்கைத் திட்டத்தினை வழங்கப்பட்ட நேரக் கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்துவதற்காக தொடர்ச்சியான காத்திரமான உறுதியான நடவடிக்கைகளை எடுத்தது. 

2019 பெப்புருவரியில் இடம்பெற்ற முழுநிறைவான சமவாயத்தில், நிதியியல் நடவடிக்கைச் செயலணிக்குழு இலங்கை அதன் நடவடிக்கைத் திட்டத்தினை நிறைவு செய்துள்ளது என்று ஆரம்பத்தில் தீர்மானித்ததுடன் இலங்கையின் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதனை சரிபார்ப்பதற்கான தலத்திலான மதிப்பீட்டுத் தேவைப்பாடுகளை தேவைப்படுத்தியதுடன் அவை உறுதிப்படுத்தப்பட்டன அத்துடன் எதிர்காலத்தில் உறுதியான நடைமுறைப்படுத்தலுக்குத் தேவையான அரசியல் கடப்பாடும் காணப்படுதல் வேண்டும்.  எனினும், 2019 ஏப்பிறல் 21ஆம் நாள் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் காரணமாக, 2019 மேயில் முன்மொழியப்பட்டிருந்த தலத்திலான விஜயம் பிற்போடப்பட்டது. மீளாய்வுக் குழு நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றத்தினை மதிப்பிடுவதற்காக 2019 செத்தெம்பர் 16 - 17ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்தது. மீளாய்வுக் குழு, இந்தியா (இணைத் தலைமை), அவுஸ்திரேலியா, பங்களாதேசம், யப்பான் மற்றும் ஆசிய பசுபிக் குழுமத்தின் பணம் தூயதாக்கல்/ செயலகத்தின் அலுவலர்களை உள்ளடக்கியிருந்ததுடன் பணம் தூயதாக்கலை தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் என்பன காத்திரமான முறையில் நடைமுறைக்கிடப்பட்டுள்ளமையினையும் வழிமுறைகள் நடைமுறையிலுள்ளமையினையும் மதிப்பிடுவதற்காக, தனியார் துறையினர் உட்பட, அனைத்து தொடர்பான ஆர்வலர்களையும் சந்தித்தது. மேலும், பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் வழிமுறைகள் எதிர்காலத்திலும் வலுவான முறையில் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அவசியமான உயர்மட்ட அரசியல் கடப்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிதியமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீரவையும் சந்தித்தது.

இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வுக் குழுவினால் செய்யப்பட்ட விதந்துரைப்புக்கள் 2019 ஒத்தோபரில் நடைபெற்ற நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் முழுநிறைவான சமவாயத்தில் கலந்துரையாடப்பட்டதுடன் அனைத்து உறுப்பினர்களும் “சாம்பல் நிறப்பட்டியலில்” இருந்து இலங்கையினை நீக்குவது தொடர்பான கலந்துரையாடலை அங்கீகரித்தனர். நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவினால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டமையானது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதியியலின் மீது சாதகமான தாக்கத்தினைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் நடவடிக்கைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவரும் நிதியியல் உளவறிதல் பிரிவின் அலுவலர்களும் தலைமை தாங்கினர். நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் நடவடிக்கைகள் திட்டத்தினை வழங்கப்பட்ட நேரக் கட்டமைப்பிற்குள் நிறைவு செய்வதற்கு கடப்பாடுகளையும் ஆதரவினையும் காட்டிய அனைத்து ஆர்வலர்களுக்கும் அதன் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் வழிமுறைகள் நாட்டில் காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதனை மேலும் வலுப்படுத்துவதற்கு அனைத்து ஆர்வலர்களிடமிருந்து தொடர்ந்தும் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கிறது. 

இலங்கை தொடர்பில் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முழு அறிக்கையும் வருமாறு:

நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் அமைப்பினை மேம்படுத்துவதில் இலங்கை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வரவேற்பதுடன் இலங்கை அதன் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் அமைப்பின் காத்திரமான தன்மையினை வலுப்படுத்தியிருப்பதனையும், 2017 நவெம்பரிலிருந்து நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவினால் அடையாளம் காணப்பட்ட உபாயக் குறைபாடுகள் தொடர்பான அதன் நடவடிக்கைத் திட்டத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக தொடர்பான தொழில்நுட்பக் குறைபாடுகளை கட்டுப்படுத்தியிருப்பதனையும் அவதானித்திருக்கிறது. ஆகவே, இலங்கை தற்பொழுது இடம்பெற்றுவரும் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்புச் செயன்முறையின் கீழ், நிதியியல் நடவடிக்கைச் செயலணிக்குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இனிஉட்பட்டிருக்கத் தேவையில்லை. இலங்கை அதன் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் அமைப்பினை மேலும் மேம்படுத்துவதற்கு ஆசிய பசுபிக் குழுமத்துடன் தொடர்ந்தும் பணியாற்றுதல் வேண்டும்.

Published Date: 

Monday, October 21, 2019