ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை - துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

இலங்கை மத்திய வங்கி, 2017இன் பிற்பகுதியில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினால் எதிர்நோக்கப்பட்ட கடுமையான திரவத்தன்மைத் தடைகள் உட்பட, 2011 இலிருந்து கம்பனியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட ஒழுங்கீனங்களையும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டது.

ஈரிஐ பினான்ஸ்சின் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய திரவத்தன்மை நிலைமையினையும் வைப்பாளர்களுக்கான மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாத நிலைமையினையும் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கம்பனியின் தொழிற்பாடுகளை மட்டுப்படுத்தும் விதத்தில் 2018.01.02ஆம் திகதியன்று பணிப்புரைகளை விடுத்தது. மேலும், கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின்படி, விற்பனைப் பெறுகைகளைப் பயன்படுத்தி வைப்பாளர்களுக்கு மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளச் செய்யும் நோக்குடன், நாணயச் சபை ஈரிஐ பினான்ஸ்சின் அடையாளம் காணப்பட்ட துணை நிறுவனங்கள், துணை – துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களை ஐ.அ.டொலர் 75 மில்லியன் கொண்ட தொகைக்கு விற்பனை செய்வதற்கான சம்மதத்தினை 2018.02.21 அன்று வழங்கியது.

குறிப்பிட்ட சில சொத்துக்கள் நீங்கலாக, மேற்குறிப்பிட்ட கொடுக்கல்வாங்கலை, 4 தொகுதிகளாகப் பெறப்பட்ட ஐ.அ.டொலர் 70 மில்லியன் கொண்ட தொகைக்கு முடிவுறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்ததுடன் தொடர்பான பெறுமதிக்குரிய சொத்துக்கள் வாங்குநர்களுக்கு மாற்றல் செய்யப்பட்டன. வாங்குநர் எஞ்சிய ஐ.அ.டொலர் 5 மில்லியனை அனுப்பாமையினால் ஈரிஐ பினான்ஸ் தொடர்பான தொகைக்கு மாற்றல் செய்யும் நோக்குடன் அதன் துணை நிறுவனமான சுவர்ணமகால் பினான்ஸ் சேர்விசஸ் பிஎல்சி இனைப் பிடித்துவைத்திருக்கிறது. ஈரிஐ பினான்ஸ்சும் சுவர்ணமகால் பினான்சியல் சேர்விஸ்சும் இலங்கை மத்திய வங்கியுடன் சேர்ந்து சுவர்ணமகால் சேர்விஸ்சினை மீளெழுச்சிப்படுத்துவதற்கான மாற்று வழிமுறைகளை தற்பொழுது பரிசீலித்து வருகின்றன. பெற்றுக்கொள்ளப்படாத ஐ.அ.டொலர் 5 மில்லியனுக்காக ஈரிஐ பினான்ஸ், சுவர்ணமகால் பினான்ஸ்சியல் சேர்விசைப் பிடித்துவைத்திருப்பதனால் ஈரிஐ பினான்ஸ்சிற்கு நிதியியல் இழப்புக்கள் ஏதும் ஏற்படாத போதும் கொடுக்கல்வாங்கல்கள் இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை.

மேற்குறிப்பிட்ட 4 தொகுதிகளினூடாக பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட நேரத்தில் காணப்பட்ட செலாவணி வீதங்களின் அடிப்படையில், ஈரிஐ பினான்ஸ் இதுவரை இலங்கை ரூ.11 பில்லியனைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிதியமானது ஈரிஐ பினான்ஸ்சின் 20 சதவீதமான வைப்புக்களையும் ஒன்றுசேர்ந்த வட்டிப் பொறுப்புக்களையும் மீளச் செலுத்துவதற்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கம்பனி தற்பொழுது வைப்பாளர்களுக்கு மேலும் 10 சதவீதத்தினை மீளச் செலுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி, இலங்கை அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி, அல்லது இலங்கை வைப்புக் காப்பறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டம் என்பனவற்றிலிருந்து எவ்வித நிதியியல் பங்களிப்புமில்லாமல் ஈரிஐ பினான்ஸ் அதன் வைப்பாளர்களுக்கு இல.ரூ.10 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகையினை செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறது.

காலத்திற்குக் காலம் கம்பனியின் மீது எடுக்கப்பட்ட பல ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளின் விளைவாக, மற்றைய விடயங்களுடன் ஈரிஐ பினான்ஸ்சின் பணிப்பாளர்கள் ஈஏபி புரோட்காஸ்டிங் கம்பனி லிமிடெட் மற்றும் சுவர்ணமகால் ஜூவல்லர்ஸ் லிமிடெட் உள்ளிட்ட அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை மாற்றல் செய்திருப்பதுடன் பணிப்பாளர்கள் கம்பனியின் எதிர்மறையான தேறிய சொத்தினை உள்ளடக்கத்தக்க விதத்தில் தனிப்பட்ட மேலதிகச் சொத்துக்களை மாற்றல் செய்வதற்கான உத்தரவாதமொன்றினையும் வழங்கியிருக்கிறார்கள்.

ஈரிஐ பினான்ஸ்சின் பிரச்சனைகளை அடையாளம் கண்ட காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளின் பெறுபேறாக, ஈரிஐ பினான்ஸ்சிற்கு மாற்றல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்தமையின் மூலம் வைப்பாளர்களுக்கு மீளச் செலுத்துவதற்கான காசினை கம்பனி தேறல் செய்து கொள்ளக்கூடியதாக இருந்தது என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது. மேலும், இலங்கை மத்திய வங்கி பணிப்பாளர்களின் தனிப்பட்ட சொத்துக்களைக் கைப்பற்றி அப்பெறுகைகளை ஈரிஐ பினான்ஸ்சிற்கு மாற்றல் செய்யும் விதத்தில் ஈரிஐ பினான்ஸ் பணிப்பாளர்களுக்கெதிராக அநேக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறது.

கம்பனிகளின் முதலீட்டாளரொருவரினால் கம்பனிகளை மீளெழுச்சிப்படுத்துவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளைத் தீவிரமாக பரிசீலித்து வருவது பற்றியும் இம்முன்மொழிவுகள் நடைமுறைக்கிடப்படின் இது தொடர்பிலான மேலதிக அபிவிருத்திகள் பற்றியும் இலங்கை மத்திய வங்கி, ஈரிஐ பினான்ஸ் மற்றும் சுவர்ணமகால் பினாஸ்சியல் சேர்விசஸ் பிஎல்சி ஆகிய இரண்டினதும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படுமென்பதனை இத்தால் அறிவித்துக் கொள்ள விரும்புகிறது.

Published Date: 

Thursday, May 2, 2019