பணம் அச்சிடுதல் தொடர்பான தவறான செய்திக் கட்டுரைகள்

கடந்த சில நாட்களாக இலங்கை மத்திய வங்கி மூலமான அதிகரித்த பணம் அச்சிடுதல் தொடர்பான அண்மைய செய்திக் கட்டுரைகள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் ஈர்க்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியானது அத்தகைய கட்டுரைகளின் எண்ணக்கருக்களும் உண்மைகளும் ஒட்டுமொத்தமாக பிழையானதாகவும் தவறாக வழிநடாத்துவதாகவும் காணப்படுவதனால் பின்வரும் தெளிவுபடுத்தலினை வழங்கவிரும்புகின்றோம்.

அரசாங்கத்தின் இறைக் கடப்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கு உதவுவதற்காக இலங்கை மத்திய வங்கி அண்மையில் பாரியளவு தொகையுடைய பணத்தினை அச்சிட்டுள்ளதாக இக்கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. வழமையாக பணம் அச்சிடுதல் என்பது ஒதுக்குப் பண (நாணயத் தளம்) விரிவுபடுத்தலினைக் குறிப்பிடுகின்றது. 2017இன் இறுதியில் ரூபா 939.8 பில்லியன் மற்றும் 2018 செத்தெம்பரின் இறுதியில் ரூபா 1,010.5 பில்லியன் ஆகவிருந்த ஒதுக்குப் பணமானது 2018 நவெம்பர் 2 அன்று ரூபா 1,020.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 11.6 சதவீதம் கொண்ட ஒதுக்குப் பணத்தின் ஆண்டுக்காண்டு வளர்ச்சியொன்றாகும். இது இவ்ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு நன்கு உட்பட்டே காணப்படுகின்றது.

அதேவேளை, உள்நாட்டுப் பணச்சந்தையில் ரூபாவின் திரவத்தன்மையானது கொள்கை வட்டிவீதங்களில் துணைநில் வசதிகளை சந்தைப் பங்கேற்பாளர்கள் பெறுவதற்கு வசதியை வழங்கியமைக்கு மேலதிகமாக 2018 செத்தெம்பர் நடுப்பகுதியிலிருந்து பற்றாக்குறையாக காணப்படும் உள்நாட்டு பணச் சந்தையின் ரூபா திரவத்தன்மை சந்தைக்கு போதுமான திரவத்தன்மையினை வழங்குவதற்கு திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடத்துவதற்கு மத்திய வங்கியை தேவைப்படுத்துகின்றது. சந்தையில் காணப்படும் பாரிய மற்றும் நீண்ட கால திரவத்தன்மையின் பற்றாக்குறைகளைக் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியானது நீண்டகால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை நடாத்தியதுடன் பிரதானமாக இரண்டாந்தரச் சந்தையிலிருந்து அரசாங்க பிணையங்களை உடனடி கொள்வனவினை மேற்கொண்டது. இவை சந்தை பங்கேற்பாளர்களுடனான கிரமமான நாணயத் தொழிற்பாடுகளாக இருப்பதுடன் அரசாங்கத்தின் அரசிறை நிலைமையுடனோ அல்லது ஏதேனும் குறித்த அரசியல் நிகழ்வுடனோ எவ்விதத் தொடர்புகளுமற்றவையாகும்.

அத்தகைய திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் விளைவாக, இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் உடைமைகளின் தேறிய ஏட்டுப்பெறுமதி (திறைசேரி உண்டியல்களின் மொத்த ஏட்டுப் பெறுமதி மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு ஒப்பந்தங்கள் மற்றும் துணைநில் கடன் வழங்கும் வசதிகள் என்பவற்றின் மொத்தப் பெறுமதியினை கூட்டி இலங்கை மத்திய வங்கியுடனான மீள்கொள்வனவு ஒப்பந்தங்களைக் கழித்தவை) 2018இன் நவெம்பர் 2 அன்று ரூபா 224.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. எவ்வாறாயினும், மொத்த அடிப்படையில்; இலங்கை மத்திய வங்கியின் அரசாங்க பிணையங்கள் உடமைகள் 2018 நவெம்பர் 2 அன்று ரூபா 67.4 பில்லியனாகயிருந்தது. ஒதுக்குப் பணத்தின் வளர்ச்சியானது தொடர்ந்தும் குறைவாகக் காணப்படாமையானது அண்மைய திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் பொருளாதாரத்தில் பணநிரம்பல் மீது நியாயமற்ற விரிவுபடுத்தல் விளைவொன்றினைக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையினைக் காண்பிக்கின்றது.

பணவிரிவாக்கம் பற்றிய அறிவினைப் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வமுடைய பொதுமக்கள் ஒரு சில ஊடகவியலாளர்களினால் அறிக்கையிடப்படுகின்ற பிழையான அறிக்கைகள் மூலம் தவறாக வழிநடாத்தப்படாது இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செம்மையான தொழில்நுட்பக் கட்டுரைகளை பார்வையிடுமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது (உதாரணம் 'பணம் அச்சிடுதல்: முறையான கட்டுப்பாடொன்று காணப்படுகின்றதா?" என்ற தலைப்பில் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் திருமதி. சுவர்ணா குணரத்ன அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை  https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics...) ஒன்றுஇணையத்தொடர்பில்கிடைக்கப்பெறுகின்றது.

Published Date: 

Wednesday, November 7, 2018