வங்கியொன்றின் பணிப்பாளர் உரித்தாண்மையைக் கொண்டிருக்கும் (கரிசனைக்குரிய) நிறுவனமொன்றிற்கு கடன் வழங்குதல் தொடர்பான தெளிவுபடுத்தல்

கடந்த அண்மைக் காலத்தில் அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் எழுப்பப்பட்ட கரிசனைகளைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியானது, உரிமம் பெற்ற வங்கியொன்றின் (வங்கி) பணிப்பாளரொருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உரித்தாண்மையைக் கொண்டிருக்கும் நிறுவனம் அல்லது நபருக்கு கடன் வழங்குதல் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நடைமுறைகளைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

பொதுவாக, வங்கிகள் தனிநபர்கள், நிறுவனங்கள், அரசாங்கம், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சபைகள், நபர்களின் கூட்டிணைப்புக்கள் மற்றும் வேறு ஏதாவது நிறுவனங்கள் போன்ற பல்வேறு வகைப்பட்ட கடன்பெறுநர்களுக்கு கடன் வசதிகளை வழங்குகின்றன. அத்தகைய கடன் வசதிகளானவை கொடுகடன் கொள்கைகள், கொடுகடன் மதிப்பீடு மற்றும் வங்கியின் கடன்வழங்கல் நடைமுறைகள் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. வங்கியின் கொடுகடன் இடர்நேர்வானது வங்கியின் ஒன்றிணைக்கப்பட்ட இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பின் அடிப்படையில் முகாமைப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் சபையானது கொடுகடன் இடர்நேர்வு உபாயம் மற்றும் வங்கியின் கொடுகடன் இடர்நேர்வுக் கொள்கைகள் என்பவற்றை உருவாக்கி அவற்றை காலாந்தரமாக மீளாய்வு செய்ய வேண்டும். கொடுகடன் வசதிகளின் மீள்கொடுப்பனவில் ஏதாவது தவறல்கள் ஏற்படுமிடத்து, வங்கிகள் அவற்றை செயற்படாக் கொடுகடனாக வகைப்படுத்துவதுடன், இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட ஏற்புடைத்தான பணிப்புரைகளுக்கேற்ப வருமான இனங்காணலை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் தேவைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அல்லது நிறுவனங்களின் குழுமமொன்றிற்கோ வங்கித்தொழில் சட்டப் பணிப்புரைகளில் குறித்துரைக்கப்பட்ட அதிகபட்ச எல்லைக்கு மேலதிகமாக கொடுகடன் வசதிகள் வழங்கப்பட முடியாது.

வங்கித்தொழில் சட்டம் மற்றும் விடுக்கப்பட்ட ஏற்புடைத்தான பணிப்புரைகளின் நியதிகளில் வங்கிகள் ஒரு பணிப்பாளருக்கோ அல்லது அத்தகைய பணிப்பாளரின் நெருங்கிய உறவினருக்கோ அல்லது வங்கியொன்றின் பணிப்பாளரொருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உரித்தாண்மையைக் கொண்டிருக்கும் கரிசனையொன்றிற்கோ கடன் வழங்குவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும், வங்கிகள் அத்தகைய கடன் வசதிகளை வழங்கும் பொழுது அத்தகைய நபர்கள் வங்கியுடன் கொண்டிருக்கும் தொடர்பின் தன்மையின் காரணமாக, அதாவது வங்கியினதும் அதன் ஏனைய ஆர்வலர்களினதும் நலவுரித்துக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பின் காரணமாக மேலதிகமான முன்மதியான தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகுமாறு தேவைப்படுத்தப்படுகின்றன.

அதன்படி, மேலதிக முன்மதியான தேவைப்பாடுகள் பின்வருமாறு:

(i)பணிப்பாளர்களுக்கு அல்லது அப்பணிப்பாளரின் நெருங்கிய உறவினர்களுக்கு அல்லது வங்கியின் பணிப்பாளர் கணிசமான அளவு உரிமம் கொண்டுள்ள  கரிசனை உடையவர்களுக்கு/ நிறுவனங்களுக்கு (அதாவது ஒரு நிறுவனத்தின் மூலதனத்தில் 10% இற்கு அதிகமான உரித்தான்மை), பணிப்பாளர் சபையின் மொத்த உறுப்பினர்களின் 2/3 இற்கு குறையாத உறுப்பினர்கள் அக்கடன் வழங்களுக்கு சாதகமாக, குறித்த கடன் வழங்களை அனுமதிக்கும் பணிப்பாளர் சபை கூட்டத்தில் வாக்களிக்கும் பட்சத்தில் கடன் வழங்க முடியும்.      

(ii)மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட கடன் வசதிகள், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பிணையங்களால் ஈடு செய்யப்படல் வேண்டும்.

(iii)ஒரு நபருக்கு, ஒரு நபரின் நெருங்கிய உறவினருக்கு அல்லது அந்நபர் கணிசமான அளவு உரித்தாண்மைக் கொண்டுள்ள எதாவது கரிசனை உடையவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அத்தகைய நபர் வங்கியின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படின், வங்கியானது வங்கித் தொழில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாணயச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பிணையங்களை அந்நபரிடமிருந்து ஒரு வருடத்திற்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.      

(iv)ஒரு வங்கியின் பணிப்பாளர், அவ்வங்கியிடமிருந்து, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த கடன் வசதிக்கும் ஆர்வம்  இருப்பின், அது தொடர்பில்  அவ்வங்கியின் பணிப்பாளர் சபைக்கு விரைவில் அறிவிக்க வேண்டும்.

(v)சம்பந்தப்பட்ட பணிப்பாளர், அப்பணிப்பாளர் அல்லது அப்பணிப்பாளரின் நெருங்கிய உறவினர் அல்லது அப்பணிப்பாளர் கணிசமான அளவு உரித்தாண்மைக் கொண்டுள்ள எதாவது கரிசனை உடையவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு வியாபார நடவடிக்கைகள் தொடர்பிலும் குழுவின் எந்த விவாதங்களிலும் அல்லது முடிவுகளிலும் பங்கெடுக்கமாட்டார், மேலும் அக்கடன் வழங்கல் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் போது அல்லது முடிவுகள் எடுக்கப்படும் போது குறித்த பணிப்பாளர், பணிப்பாளர் குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறுவர்.

(vi)ஒரு பணிப்பாளருக்கு அல்லது ஒரு பணிப்பாளரின் நெருங்கிய உறவினருக்கு ஏதாவது ஒரு நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன்வசதிகள், அந்நிதியாண்டிற்கான கணக்கறிக்கையில் வெளிப்படுத்தப்படுவதுடன் அக்கடன் வசதிகள் மீளச் செலுத்தப்படும் வரை அல்லது முழுமையாக தீர்க்கும் வரை தொடர்ந்து வரும் ஒவ்வொரு நிதியாண்டிலும் வெளிப்படுத்தப்படும்.. 

(vii)நாணயச் சபையின் முன் அனுமதியின்றி, பணிப்பாளர் அல்லது அப்பணிப்பாளரின் நெருங்கிய உறவினர் அல்லது அப்பணிப்பாளர் கணிசமானளவு உரித்தாண்மைக் கொண்டுள்ள ஏதாவது கரிசனையுடையவர்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு கடன் வசதிகளும் பதிவழிக்கப்பட முடியாது.

(viii)வங்கியானது ஏனைய தரப்பினருடன் மேற்கொள்ளும் வியாபார நடவடிக்கைகளை விட சாதகமான முறையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதனை பணிப்பாளர் சபை உறுதி செய்தல் வேண்டும்.  

இவற்றுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு வங்கியினதும் அளவு, தன்மை மற்றும் சிக்கலான தன்மை என்பவற்றுடன் இணக்கப்படும் வகையில் மேலதிக இடர்முகாமை நுட்பங்களை நிறுவுமாறு ஒவ்வொரு வங்கியினதும்  பணிப்பாளர் சபை வேண்டப்படுகின்றது.  

வங்கியின் ஒரு பணிப்பாளருடைய நேரடி மற்றும் மறைமுக தொடர்புடைய கரிசனை உடையவர்களுக்கான கடன் வழங்கல் உட்பட, பேண்தகைமை, கம்பனி ஆளுகை, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடு போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கி அதன் மேற்பார்வை நடவடிக்கைகளின் போது கவனம் செலுத்துகின்றது. இதுதொடர்பில் எதாவது இணங்கியொழுகாமை காணப்படுமிடத்து, பொருத்தமான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் வங்கிகள் மீது மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற இணங்கியொழுகாமைகளை நிவர்த்திசெய்வதனை இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து கண்காணிப்பதுடன் தேவைப்படுமிடத்து ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றது.  

இதன்படி, வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன்கொடுநர்களின் நலன்களை பாதுகாப்பதையும், நிதியியல் முறைமையின் இஸ்திரத்தன்மையை உறுதிபடுத்துவதையும் நோக்ககக் கொண்டு, வங்கிகள் சிறந்த நிதி நிலைமைகளை கொண்டுள்ளனவா மற்றும் வாங்கித்தொழில் சட்டத்தின் விதிகளுக்கும் அவற்றின் கீழ் விடுக்கப்பட்ட நியதிகளுக்கும் அமைவாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா என்பதனை பரீட்ச்சிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி மேற்பார்வைகளை செய்கின்றது.

 

Published Date: 

Friday, August 17, 2018