வெளிநாட்டுப் படுகடன் மற்றும் ஒதுக்குகள் - மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதனை ஆய்வு செய்கையில் கடன்பாடுகளை மாத்திரமன்றி படுகடன் மீள்கொடுப்பனவுகளையும் அடையாளம் காண்பது அவசியமானதாகும்

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுகள் தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

 செய்தி விடயத்தின் உள்ளடக்கமானது நாட்டின் வெளிநாட்டு நிலைமை தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற தோற்றப்பாடொன்று பற்றி விபரிக்கின்றது. 2015 – 2018 காலப்பகுதியில் அரசாங்கத்தின் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 8.9 பில்லியன் கொண்ட கடன்பாடுகள் மத்திய வங்கியின் ஒதுக்குகளுக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டதாக இது தெரிவிக்கின்ற அதேவேளையில், அரசாங்கத்தின் அலுவல்சார் படுகடன் முகாமையாளராக விளங்கும் மத்திய வங்கியினால் இக்காலப்பகுதியில் ஒதுக்குகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணிசமான படுகடன் மீள்கொடுப்பனவுகள் பற்றி இக்கட்டுரையானது கவனத்தில் கொள்ளவேயில்லை.

2015இலிருந்து அரசாங்கம் வெளிநாட்டு ஒதுக்குகளைப் பயன்படுத்தி மூலதனம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளாக ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7.5 பில்லியனைக் கொண்ட வெளிநாட்டுப் படுகடனைத் தீர்ப்பனவு செய்திருக்கிறது. 2014 இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 8.2 பில்லியனாகக் காணப்பட்டது. மேற்கொண்டு மேலும், கடன்பாடுகள் இல்லாதிருந்திருக்குமாயின் அல்லது ஒதுக்குகளின் கடன்படாத அதிகரிப்பு இருந்திருக்குமாயின் வெளிநாட்டுப் படுகடனின் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7.5 பில்லியன் கொண்ட தீர்ப்பனவு மொத்த அலுவல்சார் ஒதுக்கினைத் தற்பொழுது ஐ.அ.டொலர் 0.7 பில்லியனுக்குக் குறைவடையும் நிலையைத் தோற்றுவித்திருக்க வேண்டும் என்பதனை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

சென்மதி நிலுவையின் விடாப்பிடியான நடைமுறை கணக்குப் பற்றாக்குறையுடன் காணப்படும் இலங்கை போன்ற நாடொன்று ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்கு பல தசாப்தங்களாக வெளிநாட்டுக் கடன்பாடுகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது.

தற்பொழுது நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 9.1 பில்லியனாகக் காணப்படுகிறது. இது 2018 யூன் நடுப்பகுதியளவில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 11 பில்லியனுக்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது (தயவுசெய்து மத்திய வங்கியின் முன்னைய பத்திரிகை அறிவித்தலைப் பார்க்கவும்).

இச்செய்தியானது, நாட்டின் படுகடன் கடந்த பல ஆண்டுகளாகத் தீர்ப்பனவு செய்யப்பட்டு வருவது பற்றியும் குறிப்பிட்டிருத்தல் வேண்டும். செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.அ.டொலர் 8.9 பில்லியன் படுகடன் மீதான முதிர்ச்சிக்கான நிறையேற்றப்பட்ட சராசரிக் காலம் 5.1 ஆண்டுகளாகும். 2018 ஏப்பிறல் இறுதியிலுள்ளவாறு, 2018-2022 காலப்பகுதியில் சராசரி வருடாந்த வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவு ஐ.அ.டொலர் 3.1 பில்லியனாகும். ஆகவே, நாடு அதன் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான ஒதுக்குகளைக் கொண்டிருக்கிறது. 

வெளிநாட்டுக் கடன்பாடுகளின் செலவு மற்றும் நன்மைகளை மதிப்பிடுகையில், உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைப் பணிகளின் முதலீடுகளினூடாக அத்தகைய உட்பாய்ச்சல்களின் மூலம் உருவாக்கப்படுகின்ற பலாபலன்களைப் பரிசீலனையில் கொள்வது மிக முக்கியமானதாகும். பொருளாதார வளர்ச்சிக்காக அரச கடன்பாடுகள், தேவையான முதலீடுகளுக்கான துணை நிரப்பிகளாக இருக்கின்ற போதும் அத்தகைய முதலீடுகள் உற்பத்தியாக்கம் மிக்கனவாகவும் கணிசமான பெறுபேறுகளை வழங்கக்கூடியனவாகவும் இருப்பதனை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும். அத்தகைய பெறுபேறுகள் பரந்தளவிலான சமூகப் பொருளாதார நன்மைகளாகவும் இருக்கமுடியும். எனினும், அரசாங்கத்தின் கடன்பாடுகள் உற்பத்தியாக்கமற்ற உட்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட்டிருக்குமாயின் அது படுகடனையும் வட்டியையும் மீளச்செலுத்துவதற்கான வருவாயினை போதுமானளவில் உருவாக்காது. எனவே, அரசாங்கம் மீள்கொடுப்பனவுக் கடப்பாடுகளை மேற்கொள்வதற்கு தொடர்ந்தும் கடன்பட வேண்டியிருக்கும். ஆற்றலற்ற செயற்றிட்டங்களுக்கு நிதியிடுவதற்கு கடன்பட்ட நிதிகளைப் பயன்படுத்தப்படுமிடத்து அது உறுதியற்ற பொதுப்படுகடன் ஒன்றுதிரள்வதற்கு வழிவகுக்கும்.

உள்;ர் செலவினங்களை அரசாங்கம் பூர்த்தி செய்வதற்காக ரூபாவை வழங்குவதன் மூலம் மத்திய வங்கி அரசாங்கத்திடமிருந்து கடன்பட்ட வெளிநாட்டுச் செலாவணியினைக் கொள்வனவு செய்கிறது. இது அரசாங்கம் அதன் ஒதுக்கு முகாமைத்துவத்தினூடாக அரசாங்கத்தின் கடன்பாட்டுச் செலவினங்களுக்குச் சமனான வருவாய்களை உருவாக்குமென எதிர்பார்க்கவில்லை. 

ஒதுக்கு முகாமைத்துவத்தின் பிரதான நோக்கம் யாதெனில் ஒதுக்குகளைக் குறைத்துவிடக்கூடிய உயர் இடர்நேர்வு முதலீடுகளிலிருந்தான தேவையற்ற இழப்புக்கள் எதுவுமின்றி ஒதுக்குகளின் மட்டத்தினைப் பேணிக் கொள்வதேயாகும். எனவே, மத்திய வங்கி ஒதுக்கு முகாமைத்துவத்தில் ஒரு பாதுகாப்பான அணுகுமுறையொன்றினைப் பின்பற்றி வருகிறது. ஆகவே, மத்திய வங்கியின் ஒதுக்கு முகாமைத்துவத்தின் பிரதான நோக்கம் அதன் முதலீடுகளிலிருந்து இலாபத்தைச் சம்பாதித்துக் கொள்வதிலும் பார்க்க அதன் பாதுகாப்பே முக்கியமானது எனக் கருதுவதினால் ஒதுக்குச் சொத்துப்பட்டியலை முதலீடு செய்வதன் மீதான வருமான வீதத்துடன் கடன்பாட்டுச் செலவினை ஒப்பிடுவது மிகவும் தவறானதொரு வழிக்கு இட்டுச்செல்லும். 

செய்தி விடயமானது, 2010 – 2014 காலப்பகுதியில் மத்திய வங்கி அதன் வெளிநாட்டு ஒதுக்குகளின் முதலீடுகளின் மீது 2015 – 2017 காலப்பகுதியிலும் பார்க்கக் கூடுதலான வருவாயை உழைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. முன்னைய காலத்தில் வருமானத்தின் உயர்ந்த வீதத்திற்கு தங்கத்தின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் உலகளாவிய நிதியியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள மத்திய வங்கிகள் வட்டி வீதங்களைக் குறைத்தமையின் காரணமாக முறிகளின் மூலதன இலாபங்கள் கணிசமாக அதிகரித்தமை ஆகிய இரண்டும் காரணங்களாக அமைந்தன. பின்னைய காலப்பகுதியில் குறைந்த தங்க விலைகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த வட்டி வீதங்களைத் தொடர்ந்து உலகளாவிய வட்டி வீதச் சூழல் மாற்றமடைந்தமை என்பன காரணங்களாகக் காணப்பட்டன.

இலங்கை மத்திய வங்கி, உலக வங்கியின் ஒதுக்கு மதியுரை மற்றும் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தினூடாக உதவிகளைப் பெற்றுக்கொள்வது உட்பட, முன்மதியுடைய ஒதுக்கு முகாமைத்துவக் கொள்கைகளைத் தற்பொழுது பின்பற்றி வருகின்றது. தேவையற்ற இடர்நேர்வுகளுக்கு நாட்டின் ஒதுக்குகளை உள்ளாக்குகின்ற ஊக ரீதியான முதலீடுகளைத் தவிர்ப்பதற்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய வங்கி அதன் வெளிநாட்டு ஒதுக்குச் சொத்துப்பட்டியலை முகாமைத்துவம் செய்யும் பொழுது இடர்நேர்வு ஏற்படக்கூடிய அளவினை அது அளவிட்டு வருகின்றது. வர்த்தக ரீதியான நிதியத்தின் முகாமையாளர் என்ற வகையில் அதே இடர்நேர்வினை மத்திய வங்கி எடுப்பது பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். இதன்படி, மத்திய வங்கி அதன் வெளிநாட்டு ஒதுக்குகளின் முதலீடுகள் தொடர்பில் பாதுகாப்பு, திரவத்தன்மை மற்றும் வருவாய் என்பனவற்றிற்கிடையில் சமநிலையொன்றினைப் பேணி வருகின்றது. மத்திய வங்கியின் ஒதுக்குச் சொத்துப்பட்டியலானது பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடித்தள அளவுக்குறியீடுகளின் கூடை ஒன்றிற்கெதிராக முகாமைப்படுத்தப்படுகிறது.  

 

Published Date: 

Tuesday, May 22, 2018