ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பு உடமையாளர்களுக்கான கொடுப்பனவு

இது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமகால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பன தொடர்பான 2018.01.02 திகதியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தலுக்கு மேலதிகமானதாகும்.
 
ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் நெருக்கடியான நிதியியல் நிலைமைகளையும் அதனால் நிதியியல் முறைமைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பரிசீலனையில் கொண்ட இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை மற்றும் துணை-துணைக் கம்பனிகளிலுமுள்ள பங்குடமைகளையும் முதலீட்டுச் சொத்துக்களையும் ஏற்புடைத்தான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கிணங்க, ஐ.அ.டொலர் 75 மில்லியன் கொண்ட தேறிய தொகைக்கு விற்பனை செய்வதற்கு ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டிற்கு அனுமதியளிக்கவும் வசதியளிக்கவும் தீர்மானித்தது.
 
ஐ.அ.டொலர் 75 மில்லியனில் வாங்குநர் ஐ.அ.டொலர் 32 மில்லியனை மாற்றல் செய்ததுடன் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் இலங்கை ரூ.5,017.6 மில்லியனைப் பெற்றது. வைப்பாளர்களின் கோரிக்கையினைப் பரிசீலனையில் கொண்டு ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் விற்பனைப் பெறுகைகளைப் பயன்படுத்தி, 2018 மே இறுதியிலுள்ளவாறு, ஏறத்தாழ ரூ.3,350 மில்லியன் தொகை கொண்ட வைப்புப் பொறுப்புக்களின் 10 சதவீதத்தினையும் ரூ.1,400 மில்லியன் (ஏறத்தாழ) கொண்ட அட்டுறு வட்டித் தொகையினையும் உடனடியாகச் செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டது. கொடுப்பனவுகள் 2018.06.05 இலிருந்து ஆரம்பிக்கவுள்ளன. அத்துடன் விற்பனைப் பெறுகைகளின் மீதிப் பகுதி கிடைத்ததும் (ஐ.அ.டொலர் 43 மில்லியன்) வைப்புப் பொறுப்புக்களில் மேலும் 10 சதவீதத்தினைச் செலுத்துமாறு ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
 
2018.06.05 அன்று தொடங்கவுள்ள கொடுப்பனவுத் திட்டத்தின் விபரங்கள் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினால் அதன் வைப்பாளர்களுக்கு மிக விரைவில் அறிவிக்கப்படும். இலங்கை மத்திய வங்கி கடந்த நான்கு மாதங்களாக அனைத்துத் தொடர்பான தரப்பினர்களினாலும் வழங்கப்பட்ட உதவிகளுக்காக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்ற அதேவேளையில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் தொடர்பான நடவடிக்கைத் திட்டங்களை இறுதிப்படுத்தும் வரை அனைத்து வைப்பாளர்களும் பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறும் கொடுப்பனவுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழுவுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
 

 

Published Date: 

Sunday, May 20, 2018