இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2018 பெப்புருவரி

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2018 சனவரி 51.7 சுட்டெண் புள்ளிகளிலிருந்து பெப்புருவரி மாதத்தில் 55.6 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, முன்னைய மாதகாலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட பருவகால மெதுவடைதலுக்கு பின்னரான தயாரிப்பு நடவடிக்கைகள் சனவரி 2018 உடன் ஒப்பிடுகையில் பெப்புருவரியில் ஒரு உயர்வான வீதத்தில் விரிவடைந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்ணின் விரிவாக்கத்தினால் உந்தப்பட்டது. புதிய கட்டளைகளின் அதிகரிப்பின் மூலம் உற்பத்தி துணைச்சுட்டெண்ணும் அதிகரித்திருந்தது. இருப்பினும், புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்போடு ஒப்பிடுகையில் பெப்புருவரி மாதத்தில் காணப்பட்ட குறைந்தளவிலான வேலை நாட்களின் எண்ணிக்கை காரணமாக ஒப்பீட்டளவில் குறைந்தளவிலேயே காணப்பட்டது. மேலும், மாதகாலப்பகுதியில் தொழில்நிலை துணைச்சுட்டெண் சிறிதளவில் அதிகரித்திருந்த வேளையில் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்ணும் விரிவாக்கமடைந்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு உயர்வான வீதத்தில் நீட்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை மாதகாலப்பகுதியில் பதிவு செய்து தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது.
பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2018 சனவரி 56.6 சுட்டெண் புள்ளியிலிருந்து பெப்புருவரி மாதத்தில் 58.4 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, பணிகள் துறையானது புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள், தொழில்நிலை, மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றினால் ஆதரவளிக்கப்பட்டதன் மூலம் 2018 பெப்புருவரியில் உத்வேகம் அடைந்ததனை குறித்துக்காட்டுகின்றது. நிதியியல் சேவைகள், தகவல் தொழில்நுட்ப நிகழ்ச்சிப்படுத்தல் மற்றும் பொருட்களின் போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்ற துறைகளின் வியாபார நடவடிக்கைகளில் ஒரு உயர்ந்தளவான நன்மைகளை அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வேளையில், தொழில்நிலையானது சனவரியில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிக்கு எதிராக 2018 பெப்புருவரியில் அதிகரித்திருந்ததுடன், முக்கியமாக மொத்த மற்றும் சில்லறை வர்த்தக துறையில் இது அவதானிக்கப்பட்டது. நிலுவையிலுள்ள பணிகள் கடந்த இரு மாதங்களில் அவதானிக்கப்பட்ட போக்கினை தலைகீழாக மாற்றி பெப்புருவரி 2018 இல் குறைவடைந்திருந்ததுடன், புதிய ஆட்சேர்ப்பினூடாக அதிகரித்திருந்த தொழில்நிலையானது பகுதியளவில் காரணமாக அமைந்தது. அடுத்த மூன்று மாதங்களுக்கான வியாபார நோக்கிடலின் பணிகள் வழங்குனர்களின் நம்பிக்கை மெதுவான வீதத்தில் உறுதியடைந்திருந்தது. எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் செலவு 2018 இல் எதிர்பார்க்கப்படும் ஊதிய அதிகரிப்பின் காரணமாக முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்திருந்ததுடன், பணிகள் துறையில் விதிக்கப்பட்ட விலைகள் ஒரு குறைவான வீதத்தில் அதிகரித்திருந்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, March 15, 2018