நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 8 2017

அண்மைக்கால பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைக் கருத்திற் கொண்டு நாணயச்சபை 2017 திசெம்பர் 27ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதெனவும் தீர்மானித்துள்ளது. எனினும் மத்திய வங்கியானது பொருளாதாரத்தின் அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் தீவிரமாகக் கண்காணிப்பதுடன் தேவைப்படுமிடத்து பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இத்தகைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நாணயச்சபையால் கீழ்வரும் முக்கிய துறை அபிவிருத்திகள் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

தொகைமதிப்பு புள்ளவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளுக்கிணங்க, இலங்கையின் பொருளாதாரமானது 2017இன் மூன்றாம் காலாண்டில் எறிவு செய்யப்பட்ட வளர்ச்சிக்கு குறைவான வளர்ச்சியொன்றைப் பதிவு செய்துள்ளது. இதன்படி பொருளாதரம் 2017இன் இரண்டாம் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 4.0 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2017இன் மூன்றாம் காலாண்டில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. மூன்றாம் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது பிரதானமாக கைத்தொழில் மற்றும் சேவைகள் துறையின் மிதமான விரிவாக்கத்தினால் உந்தப்பட்டுள்ள அதேவேளையில் வானிலை தொடர்பான குழப்பநிலைகளுக்கு வகைகூறும் வகையில் வேளாண்மைத் துறையானது எதிர்மறையான வளர்ச்சியொன்றைத் தொடர்ந்தும் பதிவுசெய்துள்ளது. குறுங்கால வளர்ச்சி வாய்ப்புக்கள் தொடர்ந்தும் மிதமாகக் காணப்படினும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் தூண்டப்பட்டு ஏற்றுமதி மற்றும் முதலீட்டின் தொடர்ச்சியான எழுச்சியினால் 2018இல் பொருளாதாரமானது மீட்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேளாண்மைத் துறையின் மீட்சியும் 2018இன் வளர்ச்சி செயலாற்றத்திற்கு துணைபுரியும்.

முதன்மைப் பணவீக்கமானது 2017 நவெம்பரில் எதிர்பார்க்கப்பட்டவாறு மெதுவடைந்த போதிலும் உயர்ந்த உள்நாட்டு உணவு விலைகளின் தாக்கத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் ஆகிய இரண்டின் பேரிலான பணவீக்கமும் உயர்ந்த மட்டத்திலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது. எனினும் மத்திய வங்கியினால் பேணப்பட்டு வருகின்ற இறுக்கமான நாணயக்கொள்கை நிலையின் விளைவினைப் பிரதிபலிக்கும் வகையில் கேள்வி அழுத்தங்களின் மிதமான தன்மையினைக் குறித்துக் காட்டி, மையப் பணவீக்கமானது தொடர்ந்தும் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றது. நிரம்பல்பக்க குழப்பங்களிலிருந்து தோன்றுகின்ற உயர்ந்த உணவு விலைகளானது முதன்மைப் பணவீக்கம் உடனடி எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஓரளவிற்கு உயர்ந்த மட்டத்தில் விளங்குவதில் சிறிதளவாவது பாதிப்பினை ஏற்படுத்துகின்ற போதிலும் 2018இன் முதலாம் காலாண்டின் முடிவில் விரும்பத்தக்க மட்டத்தினை நோக்கித் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுக்கமான நாணயக் கொள்கை நிலைக்குப் பதிலிறுத்தும் வகையில், வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் வளர்ச்சி மெதுவடைவே 2017 நவெம்பரில் விரிந்த பணநிரம்பல் வளர்ச்சி கணிசமானளவு குறைவடைந்தமைக்கு பிரதான காரணமாகும். அதேவேளை கொள்கை வீதங்கள் மற்றும் அரச பிணையங்கள் மீதான விளைவுகளுக்கு இடையில் காணப்பட்ட சில வேறுபாடுகள் திருத்தப்பட்டமையால் அரச பிணையங்கள் மீதான விளைவுகள் உயர்ந்த மட்டத்திலிருந்து கீழ்நோக்கி சீராக்கப்பட்டுள்ளன. ஏனைய சந்தை வட்டி வீதங்களும் விளைவு வீதங்களுடன் இணைந்து செல்லும் வகையில் மேலும் கீழ்நோக்கி சீராகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகளவிலான நெகிழ்ச்சித் தன்மையுடைய நாணயமாற்று வீத முறைமை அமுல்படுத்தப்பட்டதனால் பகுதியளவில் நன்மையடைந்து ஏற்றுமதி வருவாய்கள் தொடர்ச்சியாக நான்காவது மாதகாலமாக இரட்டை இலக்க வளர்ச்சியினைப் பதிவுசெய்து அதன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்துள்ளன. எனினும், வானிலையுடன் தொடர்புபட்ட நெருக்கடிகளினால் பெருமளவில் உருவாகிய நிரம்பல் பக்கத் தடைகளின் காரணமான இறக்குமதி செலவினத்தின் குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பின் காரணமாக ஆண்டின் முதல் பத்து மாத காலப்பகுதியில் வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை விரிவடைந்து ஏற்றுமதி வருவாய்களின் மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டின் சாதகமான தாக்கத்தினை எதிரீடு செய்துள்ளது. எனினும் வெளிநாட்டுக் கணக்குகளின் அழுத்தங்களை ஓரளவிற்குத் தணிக்கும் வகையில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை போன்றவற்றின் மீதான உட்பாய்ச்சல்களின் பேரில் நிதியியல் கணக்கிற்கு உறுதியான உட்பாய்ச்சல்கள் அவதானிக்கப்பட்டன. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியியல் வசதிகள் நிகழ்ச்சித் திட்டத்தின் நான்காவது தொகுதி திசெம்பர் 2017 இல் கிடைக்கப்பெற்றமையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலீட்டு மீள்பெறுகை தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் போன்றவை சென்மதி நிலுவையினை மேலும் வலுப்படுத்துவதற்கு துணை புரிந்தன. இத்தகைய அபிவிருத்திகளுடன் மத்திய வங்கியின் தொடர்பான தேறிய அடிப்படையிலான ஏறத்தாழ ஐ.அ.டொலர்கள் 1.7 பில்லியன் பெறுமதியான வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளையும் பிரதிபலித்து 2017 திசெம்பர் இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர்கள் 7.8 பில்லியனுக்கு மேம்பாடடையுமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா 2017 திசெம்பர் 27இல் உள்ளவாறு 1.9 சதவீதத்தினால் தேய்வடைந்துள்ளது. 2017 காலப்பகுதியில் மத்திய வங்கி ஒரு கணிசமானளவு பாரிய சென்மதி நிலுவை மிகையினைப் பதிவு செய்ததன் மூலம் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையை பதிவுசெய்தல் மற்றும் குறைவடைந்துவரும் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் போக்குகளை மாற்றியமைக்க முடிந்துள்ளதுடன் நெகிழ்ச்சித்தன்மையுடைய பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பினை நோக்கி நகர்வதனுடன் ஒத்திசைவான தற்போதைய மேம்படுத்தப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பின் கீழ் அதிகரித்த நெகிழ்ச்சித் தன்மையுடைய நாணயமாற்று வீத முறைமையையும் பேணிவந்துள்ளது.

கிடைக்கத்தக்கதாயுள்ள குறிகாட்டிகளின் அடிப்படையில் ஆரம்ப நிலுவையில் ஒரு மிகையினை பதிவு செய்வதனை இயலச் செய்த அதிகரித்த அரசிறை திரட்டலின் காரணமாக இறைத் துறை 2017இல் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை பதிவுசெய்தது. நிவாரண நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட செலவினங்கள் மற்றும் உயர்ந்த வட்டிக் கொடுப்பனவுகளின் முக்கிய விளைவாக 2017இற்காக எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப மதிப்பீடுகளுடன் ஒப்பிடுமிடத்து முக்கிய இறை நிலுவைகளில் சில விலகல்கள் காணப்பட்ட போதிலும் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கு ஆதரவளித்து இறைத் திரட்சி நடுத்தரக் காலத்தில் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தகைய பின்னணியில் நாணயச்சபை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 7.25 சதவீதமாகவும் 8.75 சதவீதமாகவும் பேணுவதெனத் தீர்மானித்தது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்:                                கொள்கை வீதங்கள் மாற்றமடையவில்லை

துணைநில் வைப்பு வசதி வீதம்                                                  7.25%

துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம்                                    8.75% 

நியதி ஒதுக்கு விகிதம்                                                                  7.50%

முழுவடிவம்

Published Date: 

Thursday, December 28, 2017