2017 ஒத்தோபாில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரில் 8.6 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 8.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 செத்தெம்பரில் 6.8 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 7.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

மாதாந்த மாற்றத்தினைப் பரிசீலனையில் கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2017 செத்தெம்பரின் 123.3 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2017 ஒத்தோபரில் 124.8 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு மோசமான நிரம்பல்பக்க நடவடிக்கைகளின் காரணமாக உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். தேங்காய், காய்கறிகள் மற்றும் அரிசி என்பனவற்றின் விலை அதிகரிப்பு முனைப்பானதாகக் காணப்பட்டது. இருப்பினும் கூட உடன்மீன் மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை 2017 செத்தெம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட எல்பி வாயுவின் விலைத் திருத்தங்களின் தாக்கமும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் துணைத் துறையிலும் இம்மாத காலப்பகுதியில் விலை அதிகரிப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டின் முன்னைய மாதங்களிலிருந்து காட்டிய வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை தொடர்ந்தும் காட்டியது. எனவே, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரின் 4.6 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கத்தின் ஆண்டுச் சராசரி 2017  செத்தெம்பரின் 5.7 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 5.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, November 21, 2017