நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 செத்தெம்பர்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி, 2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2.6 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தற்காலிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதேவேளை 2016இன் முதற்காலாண்டின் வளர்ச்சி 5.2 சதவீதத்திற்குத் திருத்தப்பட்டது. 

2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில், பணிகளுடன் தொடர்பான நடவடிக்கைகள் 4.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த வேளையில், கைத்தொழில் தொடர்பான நடவடிக்கைகள் 2.2 சதவீதம் கொண்ட மிதமான விரிவாக்கத்தினைப் பதிவுசெய்தன. மோசமான வானிலை நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகள் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் 5.6 சதவீதம் கொண்ட சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தன. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மற்றும் வியாபார நம்பிக்கை என்பனவற்றின் இணைந்த தாக்கம் அதேபோன்று 2016இன் நான்காம் காலாண்டின் சாதகமான தளத்தாக்கம் என்பன ஆண்டின் பின்னரைப் பகுதியில் மீண்டும் வளர்ச்சி ஏற்படுவதற்குப் பங்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

வெளிநாட்டுப் பக்கத்தில், 2016இன் முதல் ஏழு மாத காலப்பகுதியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 0.7 சதவீதத்தினால் சிறிதளவிற்கு விரிவடைந்தமைக்கு, ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியானது இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட சுருக்கத்திலும் பார்க்கக் கூடுதலாக இருந்தமையே காரணமாகும். வெளிநாட்டு நிலைமையினை வலுப்படுத்துகின்ற விதத்தில் சுற்றுவலாவிலிருந்தான வருவாய்கள் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 16.0 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்ட வேளையில், தொழிலாளர் பணவனுப்பல்கள் 2016 சனவரி – யூலை காலப்பகுதியில் 4.5 சதவீதத்தினால் அதிகரித்தன. பன்னாட்டுநாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியிலிருந்து பெறப்பட்ட நம்பிக்கைகளுக்குப் புறம்பாக, அரச பிணையங்களின் பேரிலான அதிகரித்த முதலீட்டு உட்பாய்ச்சல்கள் அதேபோன்று அரசிற்கான ஏனைய நிதியியல் உட்பாய்ச்சல்கள் என்பனவும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையை சமநிலைப்படுத்த உதவின. இவ்வபிவிருத்திகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2016 ஓகத்து இறுதியில் ஐ.அ.டொலர் 6.6 பில்லியனுக்கு மேம்படுமென மதிப்பிடப்பட்ட வேளையில், இலங்கை ரூபா 2016இன் இது வரையான காலப்பகுதியில் சிறிதளவு தேய்வினையே பதிவுசெய்திருக்கிறது. 

உள்நாட்டு வழங்கல் நிலைமைகள் வழமைக்கு திரும்பியதையும் அதேபோன்று அரச வரிக் கொள்கைக்கு குறிப்பிட்ட சில மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது இடைநிறுத்தப்பட்டதனையும் பிரதிபலிக்கின்ற விதத்தில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஓகத்தில் பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்தது. மையப் பணவீக்கமும் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மிதமடைந்து பின்னயதன் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. 

நாணயத் துறையில், 2016 யூலையில் விரிந்த பணத்தின் விரிவாக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முன்னைய மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 17.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 17.8 சதவீதமாகத் தொடர்ந்தும் உயர்ந்த வீதத்தில் காணப்பட்டது. நாணயக் கூட்டுக்களின் விரிவாக்கத்திற்கு வங்கித்தொழில் துறையிலிருந்து தனியார் துறைக்கும் அரச துறையில் ஏற்பட்ட காசுப்பாய்ச்சல்கள் தூண்டுதலாக அமைந்த வேளையில் இம்மாத காலப்பகுதியில் அரச கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன் தொடர்ந்தும் சுருக்கமடைந்தது. 2016 யூலையில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் வளர்ச்சி முன்னைய மாதத்தின் 28.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 28.5 சதவீதமாகக் காணப்பட்டது. மத்திய வங்கியின் நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் அதிகரித்த சந்தை வட்டி வீதங்கள் இனிவரும் மாதங்களில் கொடுகடன் விரிவாக்கத்தினை மெதுவடையச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.  

மேற்குறிப்பிடப்பட்டவற்றினைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை, 2016 செத்தெம்பர் 27இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் பேரண்டப் பொருளாதாரத்தினை சமநிலையில் பேணுகின்ற வேளையில்  பொருளாதார நடவடிக்கைக்கு வசதியளிக்கின்ற விதத்தில் உதவக்கூடியதொரு மட்டத்தில் நாணய விரிவாக்கத்தினை மட்டுப்படுத்துவதற்கு தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறைகள் போதுமானவை என்ற கருத்தினைக் கொண்டிருக்கிறது. இதன்படி, நாணயச் சபை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் மாற்றமின்றி முறையே 7.00 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் பேணுவதென தீர்மானித்திருக்கிறது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்:                             கொள்கை வீதங்கள் மாற்றமின்றியுள்ளன 

துணைநில் வைப்பு வசதி வீதம்                                                      7.00%

துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம்                                        8.50% 

நியதி ஒதுக்கு விகிதம்                                                                     7.50%

Published Date: 

Wednesday, September 28, 2016