வைப்பாளர்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்குமாக இலங்கை மத்திய வங்கி நான்கு கடன்தீராற்றலற்ற நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவரும் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது.

2016.10.10 அன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, நாணயச் சபை 2016.10.14 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், நிதியியல் முறைமையில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினை பாதுகாக்கும் நோக்குடன் தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் பின்னணியில் பல வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் தொடர்பில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வருவது பற்றி பரிசீலனைக்கு எடுத்தது. இதற்கமைய, நாணயச் சபை, மூன்று நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களுக்கும் என்றஸ்ட் செக்குறிட்டீஸ் பிஎல்சி இல் உள்ள அரச பிணையங்களுடன் இணைக்கப்பட்ட முதலீடுகளிலுள்ள சட்ட ரீதியான முதலீட்டாளர்களுக்கும் மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் விதத்தில் பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவரும் பொறிமுறையொன்றிற்கு ஒப்புதலளித்தது.

ஸ்டான்ட் கிறடிட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், சிற்றி பினான்ஸ் கோப்பரேசன் லிமிடெட் மற்றும் சென்றல் இன்வெஸ்ட்மன் அன் பினான்ஸ் லிமிடெட் ஆகிய மூன்று நிதிக் கம்பனிகளும் 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் மோசடி மற்றும் நிதிகளின் தவறான முகாமைத்துவம் என்பன காரணமாக கடுமையான நிதியியல் பிரச்சனைகளுக்குள்ளாகியதுடன் இதன் காரணமாக வைப்பாளர்களுக்கு செலுத்துவதற்கு அவை சொத்துக்களையும் கொண்டிருக்கவில்லை. இக்கம்பனிகளை முகாமைப்படுத்தியவர்கள் புதிய மூலதனத்தினை உள்ளீடு செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளத் தவறியமையின் காரணமாக மத்திய வங்கியினால் காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்பட்ட மீளமைத்தல் முயற்சிகள் அனைத்தும் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறமுடியாமல் போயிற்று. இதன் விளைவாக இக்கம்பனிகள் கடன் தீராற்றலற்றவையாக மாறியதுடன், அதன்பின்னர் அவற்றினால் வியாபாரங்களையும் மேற்கொள்ளாமல் போயிற்று. அரச பிணையங்களை வர்த்தகப்படுத்துவதற்கான முதனிலை வணிகர் உரிமத்தினைக் கொண்டுள்ள என்றஸ்ட் செக்குறிட்டீஸ் பிஎல்சி அரச பிணையங்களில் முதலீடு செய்வதற்காக பொதுமக்களினால் வைப்புச்செய்யப்பட்ட நிதிகளை மோசடியாகப் பயன்படுத்தியமையின் விளைவாக 2015இன் பிற்பகுதியில் கடுமையான திரவத்தன்மை மற்றும் கடன்தீராற்றலற்ற நெருக்கடிகளுக்கு உள்ளானது. 2016 சனவரி 4ஆம் திகதி மத்திய வங்கி என்றஸ்ட்டின் பணிப்பாளர் சபையினை இடை நிதியத்துடன் முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்காக இதன் செயற்பாடுகளை தேசிய சேமிப்பு வங்கியிடம் ஒப்படைத்தது.

இதுவரையான முன்னேற்றங்கள் போதாமல் இருந்தமையை மீளாய்வு செய்த நாணயச் சபை அண்மிய எதிர்காலத்தில் வைப்பாளர்களினதும் முதலீட்டாளர்களினதும் பணத்தினை மீளக்கொடுப்பனவு செய்யப்படுவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில், இக்கம்பனிகளை மீள ஒழுங்குபடுத்துவதற்கு மேலும் சாத்தியங்கள் இல்லை என்ற உண்மையின் அடிப்படையில், சட்ட ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டது. ஏற்கனவே நீண்ட கால தாமதம் காணப்பட்டமையினை கருத்திற்கொண்டு, நியாயமானதொரு காலப்பகுதியொன்றிற்குள் இம்மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் இக்காலப்பகுதியில் நியாயமான வட்டிவீதமொன்றுடன் 2017 தொடக்கம் வருடாந்த அடிப்படையில் வைப்புக்கள் மற்றும் முதலீடுகளை மீளச்செலுத்துகின்ற விதத்தில் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு நாணயச் சபை ஒப்புதலளித்தது.

மூன்று நிதிக் கம்பனிகளைப் பொறுத்தவரை, மீள்கொடுப்பனவுகள் ஏறத்தாழ 11,878 வைப்பளர்களைக் கொண்ட ரூ. 4,868 மில்லியனை உள்ளடக்கியிருக்கிறது. என்றஸ்ட்டினைப் பொறுத்தவரை அரச பிணையங்களின் மூலம் பிணையிடப்பட்ட 107 முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான ரூ.3,100 மில்லியன் கொண்ட தொகை இனிவரும் வாரங்களில் தீர்ப்பனவு செய்யப்படும். என்றஸ்ட்டிலுள்ள 24 தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.8,508 மில்லியன் தொகை கொண்ட பிணையிடப்படாத முதலீடுகள் தொடர்பில் அரச பிணையங்கள் ஒதுக்கப்படவுள்ளதுடன் செலான் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவ ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மீள்கொடுப்பனவுத் திட்டத்தின்கீழ் இவை மீளச்செலுத்தப்படும். மத்திய வங்கி தேவையான நிருவாக நடவடிக்கை முறைகளை நிறைவுசெய்து அனைத்து வைப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அறிவிக்கும். மீள்கொடுப்பனவுத் திட்டம் சட்ட ரீதியாக இறுதிப்படுத்தப்பட்டதும், இக்கம்பனிகளை ஒடுக்கி விடுவதற்காக பொருத்தமான சட்டங்களின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இக்கம்பனிகளில் சொத்துக்கள் எதுவும் இல்லாததாலும் இக்கம்பனிகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் எவரும் விரும்பாததாலும் மேற்குறிப்பிட்ட வைப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்வதே ஒரே தேர்வு என நாணயச்சபை கருதுகிறது.

பிரச்சனைக்கு முடிவொன்றைக் காணும் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய வங்கி, மோசடி மற்றும் நிதிகளை தவறாகக் கையாண்டமை என்பனவற்றிற்கும் பொறுப்பாக இருந்த பணிப்பாளர்களுக்கும் முகாமையாளர்களுக்குமெதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடுப்பதற்கும் அவர்களிடமிருந்து அத்தகைய நிதிகளை அறவிட்டுக் கொள்வதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கென வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தில் புதிய சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பிரிவொன்றினை நிறுவும். என்றஸ்டினைப் பொறுத்தவரை, சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மத்திய வங்கியின் உதவியுடன் சட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்துள்ளனர். சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பிரிவு, தற்போதுள்ள கம்பனிகளில் பரீட்சிப்பு அலுவலர்கள் அத்தகைய சம்பவங்களை கண்டுபிடிக்கும் சந்தர்ப்பத்தில் இதேபோன்ற மோசடி நடவடிக்கைகளைப் புரியும் தரப்பினருக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்றவிதத்தில் கிரமமான நடவடிக்கை முறைகளை அறிமுகப்படுத்தும். மேலும் மத்திய வங்கியில் காணப்படும் இத்தகைய தவறுகளைக் கட்டுப்படுத்தவும் தற்போதுள்ள நிறுவனங்களில் பாதுகாப்பினையும் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் உறுதிப்படுத்தும் விதத்தில் முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைப் பொறிமுறைகள் பலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

எனினும், ஒழுங்குவிதியினையும் மேற்பார்வையினையும் வங்கிகளிலும் நிதியியல் நிறுவனங்களிலும் பொதுமக்களினால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வைப்புக்களுக்கும் முதலீடுகளுக்குமான உத்தரவாதமொன்றாக பொருள் கொள்ளக்கூடாது என்பதனை வலியுறுத்துவது முக்கியமானதாகும். அத்தகைய வைப்புக்களையும் முதலீடுகளையும் மேற்கொள்பவர்களும் இந்நிதிகளை அடிப்படையாகக் கொண்டு வியாபாரத்தினை மேற்கொள்பவர்களும் அவர்களது நிதியத்தின் முன்மதியுடைய முகாமைத்துவம் தொடர்பில் வியாபாரத் தீர்மானங்களை மேற்கொள்ள முக்கிய பொறுப்புடையவர்களாவர். உண்மையில், மேற்குறிப்பிட்ட இடர்பாட்டிலுள்ள கம்பனிகளில் வைப்புச் செய்யப்பட்ட பெரும்பாலும் அனைத்து நிதிகளும் அதிகாரமளிக்கப்படாத நிதியில் சாதனங்களினூடாகவே திரட்டப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையான வைப்பாளர்களும் முதலீட்டாளர்களும் கூட இடர்நேர்வு மற்றும் அதனால் வரக்கூடிய விளைவுகள் தொடர்பில் சாதாரணமாக, நெருக்கமான கவனிப்புக்களை மேற்கொள்வதற்குரிய போதுமான அறிவையும் தேர்ச்சியையும் பெற்றிருந்தும்கூட அவ்வாறு செய்யாது அவற்றை புறந்தள்ளியிருக்கின்றனர். மத்திய வங்கியின் பொறுப்பு யாதெனில், சட்டம் அனுமதிக்கின்ற அளவிற்கு ஒழுங்கு விதிகள் மற்றும் மேற்பார்வையினூடாக வெளிப்புற பாதுகாப்புக்களை வழங்குகின்ற அதேவேளையில், உறுதியான நிதியியல் முறைமையொன்றில் பாதுகாப்பும் ஆற்றலும் வாய்ந்த விதத்தில், பொருளாதாரத்திற்கும் பொதுமக்களுக்கும் இன்றியமையாததான வியாபாரத்தினை நிறுவனங்கள் மேற்கொள்வதற்கு வசதியளிப்பதேயாகும்.

ஆகவே, பொதுமக்களின் நலன்கருதி இந்நீண்டகால பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டுவரும் பொருட்டு இத்தீர்மான திட்டங்களுக்காக ஆர்வலர்கள் அனைவரும் மத்திய வங்கியுடன் ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஒத்துழைப்பு கிடைக்காத சந்தர்ப்பத்தில் சட்டத்தின்கீழ் இக்கம்பனிகள் மூடப்படுவதற்கு தயக்கத்துடன் அனுமதியளிப்பதனைத்தவிர வேறு தெரிவுகள் எதுவும் மத்திய வங்கிக்கு இருக்காது.  

 

Published Date: 

Tuesday, October 18, 2016