நுண்நிதியளிப்புத் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற கம்பனிகளுக்கு உரிமம் வழங்குதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்

தற்பொழுது ஒழுங்குமுறைப்படுத்தப்படாதிருக்கும் நுண்நிதியளிப்பு நிறுவனங்களை உள்ளடக்கும் விதத்தில் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்றினை வழங்கும் குறிக்கோளுடன் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் நோக்கம் குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கும் நுண்பாக தொழில்முயற்சிகளுக்கும் நிதியியல் பணிகள் வழங்கப்படுவதனை மேம்படுத்தல், நிதியியல் பணிகள் கிடைப்பதனை அதிகரித்தல், நுண்நிதியளிப்பு நிறுவனங்களின் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் முறைமையினையும் வலுப்படுத்துதல், பரந்தளவு நிதியிடல் மூலங்களைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நுண்நிதியளிப்பு நிறுவனங்களுக்கு வசதியளித்தல், நுகர்வோர் பாதுகாப்பினை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பானதும் உறுதியானதுமான நிதியியல் முறைமையினை மேம்படுத்துதல் என்பனவாகும்.

நுண்நிதியளிப்புச் சட்டம் 2016 யூலை 15ஆம் நாளன்று தொழிற்பாட்டிற்கு வந்தது. இதற்கமைய, நுண்நிதியளிப்புத் தொழிலை மேற்கொள்ளும் விண்ணப்பதாரக் கம்பனிகளுக்கு உரிமங்களை வழங்கவும், உரிமம் பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகளுக்கு ஒழுங்குவிதிகளையும் பணிப்புரைகளையும் வழங்கவும் மற்றும் அரசுசார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும் மேற்பார்வை செய்யவும் தன்னார்வ சமூகப் பணிகள் அமைப்புக்களின் பதிவாளருக்கு வழிகாட்டல்களை வழங்குவதற்கும்  இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது.

நுண்நிதியளிப்புச் சட்டத்தின் அத்தகைய ஏற்பாடுகளுடன் இணங்கிச் செல்லும் விதத்தில், நாணயச் சபையானது இதன் குறிக்கோள்களை நிறைவேற்றும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கமைய, உரிமம் வழங்குவதற்கான பிரமாணங்களையும் உரிமக் கட்டணங்களையும் வலியுறுத்துகின்ற இரண்டு விதிகளும் மற்றும் மூலதனம், திரவச் சொத்துக்கள், நியதி ஒதுக்குகள், வைப்புக்கள், கடன் வசதிகள், உரிமம் பெற்ற நுண்பாக நிதியியல் கம்பனிகளின் பணிகளை நிருவகிக்கின்ற ஆளணியினரின் பொருத்தம் மற்றும் தகுதி, பங்குதாரர்களை மதிப்பிடல் மற்றும் அறிக்கையிடல் தேவைப்பாடுகள் என்பனவற்றை உள்ளடக்கிய எட்டுப் பணிப்புரைகளும் 2016 ஒத்தோபர் 27 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் விடுக்கப்பட்டிருக்கின்றன. உரிமத்திற்கான பிரமாணங்களைப் பூர்த்தி செய்த நிறுவனங்கள் நுண்நிதியளிப்புச் சட்டத்தின்படி உரிமத்திற்காக விண்ணப்பிக்க முடியும். இவ்விண்ணப்பம் நாணயச் சபையினால் மதிப்பீடு செய்யப்படும். முன்மதியுடைய பணிப்புரைகள் உரிமம் பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகளின் ஆற்றல்வாய்ந்த தொழிற்பாட்டினையும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினையும் உறுதிப்படுத்தும். 

தன்னார்வ சமூகப் பணிகள் நிறுவனங்களில் பதிவாளருக்கான வழிகாட்டல்கள் தற்பொழுது தொடர்பான பங்குடமையாளர்களுடனான கலந்துரையாடல் கட்டங்களில் காணப்படுவதுடன் இனிவரும் காலத்தில் அவை நாணயச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

Published Date: 

Tuesday, November 29, 2016