அரச பிணையங்கள் சந்தையின் வெளிப்படைத்தன்மையில் மேலும் முன்னேற்றங்கள்

இலங்கை மத்திய வங்கி 2017.04.26இல் அரச பிணையங்களின் மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல் வர்த்தகத்திற்கு முதனிலை வணிகர்களும் உரிமம் பெற்ற வங்கிகளும் பு;ம்பேர்க் இலத்திரனியல் முறி வர்த்தகப்படுத்தல் தளத்தினைப் பயன்படுத்த வேண்டுமென்பதனைக் கட்டாயமாக்கியிருக்கிறது. இதன்படி, அவர்கள்:

  1.  வர்த்தகப்படுத்தல் தளத்தில் அவர்களிடையேயான மீள்கொள்வனவினை விலைக்குறிப்பீடு செய்து வர்த்தகப்படுத்த வேண்டும் எனவும் 
  2. முதலீட்டாளர்களுடன் கருமபீடத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களை வர்த்தகப்படுத்தல் தளத்தில் மேற்கொள்ள வேண்டுமெனவும் அல்லது ஒவ்வொன்றும் ரூ.100 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மீள்கொடுப்பனவும் முடிவடைந்த 30 நிமிடங்களுக்குள் வர்த்தகத் தளத்திற்கு அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இதன்படி, முறைமைகளின் பரீட்சிப்பும் கண்காணிப்பும் தற்பொழுது நிறைவடைந்துள்ளன. மத்திய வங்கி மீள்கொள்வனவு தொகைகள் பற்றிய வர்த்தகத் தகவல்களின் நாளாந்தத் தொகுப்பினையும் ஓரிரவு, ஒரு கிழமை, இரண்டு கிழமை போன்ற காலத்திற்கான தரப்படுத்தப்பட்ட காலப்பகுதியினை அடிப்படையாகக் கொண்ட விளைவு வீதங்களையும் சந்தைப் பங்கேற்பாளர்களின் தகவல்களுக்காக குறுகிய காலத்தில் வெளியிடுகின்றது. இது, இலங்கையில் அரச பிணையங்களின் வர்த்தகப்படுத்தலுக்காக வடிவமைக்கப்பட்ட புளூம்பேர்க் வர்த்தகப்படுத்தல் தளத்தின் மூன்றாவது கட்டமாகும். இவ்வர்த்தகத்தளம் முதலில் முதனிலை வணிகர்களூடாக மேற்கொள்ளப்படும் ரூ.50 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட அரச பிணையங்களின் உடனடி வர்த்தகத்திற்காக 2016.08.01 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் இது 2016.09.15 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இதன்படி, அவ்வாறு அறிவிக்கப்பட்ட உடனடி வர்த்தகம் 2017.03.31 வரை ரூ.1,128 பில்லியனாகவும் 6,763 கொடுக்கல்வாங்கல்களாகவும் விளங்கின. மத்திய வங்கி வர்த்தகம் தொடர்பான புள்ளிவிபரத் தொகுப்பொன்றினை நாளாந்தம் பொதுமக்களுக்கு வழங்குகிறது

வெளிப்படைத்தன்மையினையும் சந்தை அபிவிருத்தியையும் மேலும் அதிகரிப்பதற்கான செயன்முறையில் முக்கிய கொள்கை வழிமுறைகளாகப் பின்வருவன காணப்படுகின்றன;

  1. புதிய மத்திய வைப்பக முறைமை மற்றும் மத்திய தீர்ப்பனவு முறைமை என்பன உட்பட, இரண்டாந்தரச் சந்தை இலத்திரனியல் வர்த்தகப்படுத்தல் தளமொன்றினை உருவாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்த கொள்வனவுச் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 
  2. ஒப்புறுதி வசதியுடன் திறைசேரி முறிகளுக்காக புதிய மாதாந்த பகிரங்க ஏல முறைமையொன்றினை நடத்துவதற்கு நாணயச் சபையின் ஒப்புதல்; அத்துடன்
  3. சந்தை ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவதற்காக விதிகள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை முறைமைப் பரீட்சிப்புக்கள் 

இதற்கமைய, சந்தைக்கு ஏற்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை விலைகளைக் கண்டறிவதனை மேம்படுத்தி சந்தையின் திரவத்தன்மையினையும் அது சென்றடையும் பரப்பினையும் அதிகரிப்பதுடன் நடுத்தர காலத்தில் கடன்பாட்டுச் செலவினையும் குறைக்கும். 

Published Date: 

Wednesday, May 3, 2017