இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது 2024 சனவரி 22ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 9.00 சதவீதம் மற்றும் 10.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளின் அனைத்தையுமுள்ளடக்கிய பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை இலக்கிடப்பட்ட 5 சதவீத மட்டத்தில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த மட்டத்தினை அடைவதனை இயலச்செய்யும் பொருட்டு சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. வரிவிதிப்பு மற்றும் நிரம்பல் பக்க காரணிகள் என்பவற்றின் அண்மைய அபிவிருத்தித் தாக்கங்கள் பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தங்களைக் குறுங்காலத்தில் தோற்றுவிக்கக்கூடுமென்பதனை சபை கருத்திற்கொண்டது. இருப்பினும், இவ்வபிவிருத்திகளின் தாக்கம் நடுத்தர காலப் பணவீக்கத் தோற்றப்பாட்டினைப் பெருமளவு மாற்றியமைக்காதென சபை கருதியது. மேலும், கடந்த கால நாணயக் கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினால் உருவாக்கப்பட்ட இடைவெளி மற்றும் சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களில் மேலும் கீழ்நோக்கிய சீராக்கத்திற்காக அரச பிணையங்களுடன் இணைக்கப்பட்ட இடர்நேர்வு மிகையின் வீழ்ச்சி என்பவற்றினை சபை கருத்திற்கொண்டது. சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களை மேலும் குறைப்பதிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற நன்மைகள் வியாபாரங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதியியல் நிறுவனங்களின் மூலம் போதியளவிலும் விரைவாகவும் ஊடுகடத்தப்பட வேண்டுமென்பதனை சபை வலியுறுத்தியது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, January 23, 2024