இலங்கை மத்திய வங்கி, 2023ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கிறது

2023ஆம் ஆண்டின் நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வானது நிதியியல் முறைமையில் காணப்பட்ட அபிவிருத்திகள், இடர்நேர்வுகள் அவற்றின் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படும் தன்மைகள் மற்றும் ஆய்விற்குரிய காலப்பகுதியில் அத்தகைய இடர்நேர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினாலும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகள் என்பனவற்றை உள்ளடக்கியிருப்பதோடு 2023 செத்தெம்பர் இறுதி வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளமான (http://www.cbsl.gov.lk) இல் பார்வையிடமுடியும்.

2023ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வின் சுருக்கமும் நிதியியல் உறுதித்தன்மையின் தோற்றப்பாடும் கீழே தரப்படுகின்றன: 

பொருளாதார நெருக்கடியினை உடனடுத்து முன்னொருபோதுமில்லாத பல்வேறு சவால்களை அனுபவித்த நிதியியல் துறை, சவால்மிக்க சூழ்நிலைகளின் கீழேயே தொடர்ந்தும் தொழிற்பட்டது. 2023 செத்தெம்பரில் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் ஒட்டுமொத்த அடிப்படையிலான பொருளாதாரச் சுருக்கமானது இறைத்திரட்சிக்கு ஆதரவளிப்பதனை நோக்கமாகக் கொண்ட வரி உயர்வுகள், உயர்வடைந்த விலை மட்டங்கள் மற்றும் வட்டி வீதங்கள் என்பனவற்றுடன் இணைந்து பொருளாதார முகவர்களின் நலிந்த ஐந்தொகையொன்றைத் தோற்றுவித்தது. இதன்படி, குறிப்பிடத்தக்களவிற்கு மோசமடைந்த கொடுகடன் தரத்திற்கு மத்தியிலும் கொடுகடனுக்கான கேள்வி மற்றும் வழங்கல் நிலைமைகள் குறைவடைந்தமையினைப் பிரதிபலித்து நிதியியல் இடையேற்பாடு  குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றினை எடுத்துக்காட்டியது. ஒட்டுமொத்த கொடுகடன் வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்தியிலும் அரசாங்கத்திற்கான நிதியியல் துறையின் வெளிப்படுத்துகை தொடர்ச்சியாக அதிகரித்து, நிதியியல் துறைக்கு சவால்களை ஏற்படுத்தும் சமநிலையற்ற தன்மையினை எடுத்துக்காட்டியது. 2023 மாச்சில் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதிக்கான ஒப்புதல் நம்பிக்கையினைக் கொண்டு வந்த வேளையில், நாட்டிற்கான படுகடன் மறுசீரமைப்பு செய்முறை பற்றிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வங்கியினை ஆய்ந்தறிதல் செயன்முறையின் பெறுபேறு போன்ற அபிவிருத்திகள் இத்துறை மீது சில கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. நாணயக் கொள்கைத் தளர்த்தலின் ஆரம்பத் தாக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், கொடுகடன் சுழற்சியின் நிலையினைப் பிரதிபலிக்கின்ற மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான தனியார் துறைக் கொடுகடனுக்கான இடைவெளி (கொடுகடன் இடைவெளி), சுழற்சி வட்டத்தின் கடுமையான தன்மையினைக் கடந்து சென்றுவிட்டமைக்கான சமிக்ஞைகளைக் காட்டியதுடன் சுழற்சி வட்டம் தற்பொழுது மீட்சிக் கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறது.

முழுவடிவம்

 

 

Published Date: 

Friday, December 29, 2023