தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 திசெம்பரில் மேலும் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 நவெம்பரின் 65.0 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.2 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 நவெம்பரின் 69.8 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.3 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 நவெம்பரின் 60.4 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 திசெம்பரில் 0.01 சதவீதத்தைப் பதிவுசெய்தது. 0.20 சதவீதத்தால் குறைவடைந்த உணவு வகையிலுள்ள பொருட்களினது விலைத் தாக்கங்களை, உணவல்லா வகையினுள் 0.21 சதவீதத்தால் ஏற்பட்ட விலை அதிகரிப்புடன் எதிரீடு செய்தமை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கமைய, உணவு வகையினுள் பெரிய வெங்காயங்கள், கருவாடு, சீனி, காய்கறிகள் மற்றும் அரிசி என்பவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறாயினும், மாதகாலப்பகுதியில் தேங்காய், பால்மா மற்றும் உடன் பழங்கள் என்பவற்றின் விலைகள் அதிகரித்தன. 2022 திசெம்பர் மாதக்காலப்பகுதியில் உணவல்லா வகையினுள் ஆடை மற்றும் காலணி, அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் துணை வகைகளில் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

அதேவேளை, ஆண்டுச் சராசரிப் பணவீக்கம் 2022 நவெம்பரின் 46.7 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 50.4 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.  

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 நவெம்பரின் 60.1 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 57.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2022 நவெம்;பரின் 40.0 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 43.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

 

முழுவடிவம்

 

Published Date: 

Monday, January 23, 2023