இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தினை மேற்கொள்கையில் சபையானது அண்மைய பேரண்டப்பொருளாதார நிலைமைகள், எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையில் கொண்டது. தற்போது நிலவுகின்ற இறுக்கமான நாணய நிலைமைகள், குறைவடைந்து செல்கின்ற பணவீக்கத்தின் வேகம் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய காரணிகள் இரண்டினாலும் ஆதரவளிக்கப்பட்டு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க வீழ்ச்சிப் பாதை என்பவற்றினை சபை குறித்துக்காட்டியது. எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்டும் பணவீக்க வீழ்ச்சிப் பாதையினையடைவதற்கு நாணய நிலைமைகள் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதாக சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. இறுக்கமான இறை வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை வழிமுறைகளின் தாக்கங்களை முழுமையடையச்செய்து கூட்டுக்கேள்வி அழுத்தங்களின் ஏதேனும் கட்டியெழுப்புதலினை தணித்து அதன்மூலம் பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்தி முதன்மைப் பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்குக் கொண்டுவருவதில் துணைபுரியும். 

முழுவடிவம்

Published Date: 

Thursday, October 6, 2022