வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 யூலை

2022 யூலையில் ஏற்றுமதி வருவாய்கள் அதிகரித்த அதேவேளையில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. 2022 யூலையில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்;ச்சியானது வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை அழுத்தங்களுக்கு மத்தியில் வங்கித்தொழில் முறைமையில் காணப்பட்ட செயற்பாடுகளின் ஒட்டுமொத்த மிதமடைதலின் தாக்கத்தினைப் பிரதிபலித்த வேளையில், அவசரமற்ற இறக்குமதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளும் இறக்குமதிக் கேள்வி அழுத்தங்களைக் கட்டுப்படுத்தத் துணைபுரிந்தன. இதன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 யூலை மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க சுருக்கமொன்றினைப் பதிவுசெய்ததன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட அழுத்தங்களைத் தளர்த்தியது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 யூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 யூலையில் சிறிதளவு அதிகரித்துக் காணப்பட்டதுடன் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் மிகையடைந்து காணப்பட்டதன் மூலம் சென்மதி நிலுவையின் கடுமையான அழுத்தங்களின் கீழ் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை நிலைமைகளுக்கு ஆதரவளித்தது. சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் குறைந்தளவிலான தளத் தாக்கத்தின் அடிப்படையில் 2022 யூலையில் (ஆண்டிற்காண்டு) அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 யூலையில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன. அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியிடும் பொருட்டு மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையைத் தொடர்ந்தும் வழங்கியமையினால் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் பயன்படுத்தக்கூடிய மட்டம் குறைவடைந்து காணப்பட்டது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 361 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, September 6, 2022