நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதி தொடர்பான செயலமர்வு

இலங்கை மத்திய வங்கி, உலக வங்கிக் குழுமத்தின் உறுப்பினரான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தினால் முகாமைப்படுத்தப்படும் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் வலையமைப்புடன் கூட்டாக இணைந்து 2017 பெப்புருவரி 28ஆம் நாள் மத்திய வங்கி, கொழும்பின் ஜோன் எக்ஸ்ரர் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதி" என்ற தலைப்பில் செயலமர்வொன்றினை நடத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்திருக்கிறது. இச்செயலமர்வில் பிரதம விருந்தினராக மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு பிரதான உரையினை ஆற்றுவார். 

2017இன் ஆரம்பத்தில், மத்திய வங்கி 2017 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகளை (வழிகாட்டல்) அறிவித்தது. வழிகாட்டலில், நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் வலையமைப்பின் ஒரு உறுப்பினர் என்ற ரீதியில் இது எடுத்துக்காட்டப்பட்டதுடன், மத்திய வங்கி, வங்கிகள் அவை நிதியிட்ட செயற்றிட்டங்களில் காணப்படும் சூழல் மற்றும் சமூக இடர்நேர்வுகளைக் காத்திரமான விதத்தில் கட்டுப்படுத்துவதற்கு உதவும் விதத்திலும் பசுமையான, காலநிலை சிநேகபூர்வத் தன்மையினையும் சமூக ரீதியாக வசதிகளை வழங்கக்கூடியதுமான வியாபாரங்களுக்கு உதவியளிக்கும் விதத்திலும் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் நடைமுறைகளின் மீது குவிந்த கவனத்தினைச் செலுத்தும். பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதியினை நோக்கி எடுக்கப்பட்ட முக்கியமானதொரு நடவடிக்கையாக இது அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கி 2017இன் முதற் காலாண்டுப் பகுதியில் இலங்கையிலுள்ள நிதியியல் நிறுவனங்களின் பங்கேற்புடன் செயலமர்வொன்றினை மேற்கொள்ள எண்ணியது.  

இலங்கையின் முதலாவது நீடித்துநிலைத்திருக்கக்கூடிய செயலமர்வு இலங்கையில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதியினை மேம்படுத்தும் பொருட்டு முக்கிய ஆர்வலர்களிடையே விழிப்புணர்வினை அதிகரிப்பதனையும் ஒற்றுமையினைக் கட்டியெழுப்புவதனையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதற்கமைய, இலங்கையின் பொருளாதாரத்தின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய விதத்தில் நிதியியல் துறையினைச் சிறந்த தகவல்களுடனும் அதிகாரத்துடனும் கூடியதொரு துறையாக்கும் விதத்தில் தொலைநோக்கினையும் நடவடிக்கைகளையும் கூட்டாக வரைவிலக்கணப்படுத்துவதற்காக ஒழுங்குமுறைப்படுத்தல் ஆர்வலர்களுக்கும் நிதியியல் நிறுவனங்களுக்குமான அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்கும் அறிவாற்றலை வலுப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. செயலமர்வின் பிரதான பெறுபேறாக நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதி வழிகாட்டல்/ நெறிப்படுத்தல்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதியின் மீது தொழிற்படுகின்ற குழுவொன்றினை ஏற்படுத்துவது விளங்கும்.

Published Date: 

Monday, February 27, 2017