எதிர்வரவுள்ள படுகடன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பினை மீள்வலியுறுத்தல்

இலங்கையானது நாட்டிற்கான படுகடனைச் செலுத்தத் தவறுவதன் விளிம்பிலிருப்பதாக அண்மையில் வெளியான சில ஊடக அறிக்கைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியானது அத்தகைய கூற்றுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவையெனத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதுடன் பன்னாட்டு நியமங்களின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நம்பகமான உத்தியோகபூர்வ தரவுகளின் கிடைப்பனவிற்கு மத்தியிலும் இவ்வறிக்கைகள் வெளிப்படையாகவே உண்மைக்குப் புறம்பான துல்லியமற்ற தரவுகளைக் கொண்டுள்ளனவெனவும் வருந்தி நிற்கின்றது. ஆகையால், அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன எதிர்வரவுள்ள சகல படுகடன் கடப்பாடுகளையும் பூரணப்படுத்துவதன் மூலம் இலங்கையின் அப்பழுக்கற்ற படுகடன் பணிக்கொடுப்பனவுப் பதிவினைப் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளன என்பதனை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும்  இலங்கை மத்திய வங்கியானது உறுதியளிக்க விரும்புகின்றது.

சில காலாண்டுகளில் அத்தகைய தீர்ப்பனவுகள் சாத்தியமாக காணப்படமாட்டாதென்ற பாதகமான ஊகங்கள் காணப்பட்ட போதிலும் 2022 சனவரியில் முதிர்ச்சியடைந்த ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியினை இலங்கை வெற்றிகரமாகத் தீர்த்திருந்தது. உண்மையில், 2020 சனவரி தொடக்கம் மொத்தமாக ஐ.அ.டொலர் 2.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் மீள்கொடுப்பனவுகளுடன் தற்போது மொத்த வெளிநின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் ஐ.அ.டொலர் 12.55 பில்லியனிற்குக் குறைவடைந்துள்ளதுடன் 2022 யூலையளவில் ஐ.அ.டொலர் 11.55 பில்லியனிற்குக் குறைவடைந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படிப்படியாக ஏறத்தாழ 10 சதவீதத்திற்கு நாட்டிற்கான பன்னாட்டு முறிப் படுகடனைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் மூலோபாயத்துடன் பரந்தளவில் இசைந்து காணப்படும். அக்குறிக்கோளினை நோக்கி 2022 யூலையில் முதிர்ச்சியடையும் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறி உள்ளடங்கலாக வரவிருக்கும் படுகடன் கடப்பாடுகளைப் பூரணப்படுத்தும் பொருட்டு அநேகமான இருபுடை மற்றும் பல்புடை நிதியளித்தல் ஏற்பாடுகளினூடாக மாற்று வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன ஏற்கனவே மேற்கொண்டுள்ளன. இப்பின்னணியில், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அதனால் தோற்றுவிக்கப்படும் பன்னாட்டு ஒதுக்குகளின் திரட்சி என்பவற்றுடன் எவ்வித தடங்கல்களோ அல்லது செலுத்தத் தவறுதல்களோ இன்றி அரசாங்கம் அதன் நாட்டிற்கான படுகடனைத் தீர்ப்பனவு செய்வதனை உறுதிப்படுத்தக்கூடியதாயிருக்கும் என்பதனால் படுகடன் மறுசீரமைப்பு (இவ்வூடக அறிக்கைகளில் கூறப்படுவது போன்று) தொடர்பில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான தேவை ஏற்படுவதில்லை.

இதற்கமைய, எதிர்கால படுகடன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் இயலளவு தொடர்பில் ஊகங்களைத் தூண்டும் தனிப்பட்ட நலன்களைக் கொண்ட சில தரப்பினரால் பரப்பப்படும் இத்தகைய தவறான கதைகள், தவறாக வழிநடத்தும் கருத்துக்கள் மற்றும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் பிழையான பொருட்கோடல்கள் போன்றவற்றினால் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகம் தவறாக வழிநடத்தப்பட வேண்டாமென இலங்கை மத்திய வங்கியானது தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

 

Published Date: 

Wednesday, February 9, 2022