வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 ஒத்தோபர்

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை 2020 ஒத்தோபரில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 509 மில்லியனிலிருந்து 2021 ஒத்தோபரில் ஐ.அ.டொலர் 495 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2021 ஒத்தோபரில் வரலாற்றில் முதற்தடவையாக உயர்ந்தளவிலான மாதாந்த ஏற்றுமதிப் பெறுமதியினைப் பதிவுசெய்த அதேவேளையில், தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனிற்கு மேலான ஏற்றுமதி வருவாய்களைப் பதிவுசெய்தது. மேம்பாடடைந்துவரும் நாணய மாற்றல்களுடன் கூடிய ஏற்றுமதி வருவாய்களின் இத்தகைய அதிகரிப்பு எதிர்வரும் காலப்பகுதியில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதிச் செலவினமும் 2021 ஒத்தோபரில் ஆண்டிற்காண்டுஅடிப்படையில் வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்தன. 2021 ஒத்தோபரில் தொழிலாளர் பணவனுப்பல்களில் மேலுமொரு மிதமான போக்கு அவதானிக்கப்பட்டது. இம்மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை இம்மாத காலப்பகுதியில் வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடி செலாவணி வீதம் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 201 ரூபாவாகக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Monday, December 20, 2021