இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீடு மற்றும் வங்காளதேச வங்கியுடனான நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் ஆரம்ப பகிர்ந்தளிப்புக்களைப் பெற்றுக்கொள்கின்றது

2021 ஓகத்து மாத காலப்பகுதியில் இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகளாவிய சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டின் அதன் பகுதியினையும் இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்காளதேச வங்கிகளுக்கிடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாட்டின் கீழ் ஆரம்ப பகிர்ந்தளிப்புக்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையினால் பெறப்பட்ட சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டானது ஐ.அ.டொலர் 787 மில்லியனிற்கு சமனாக இருந்த அதேவேளை, வங்காளதேச வங்கியுடனான நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் கீழ் ஐ.அ.டொலர் 150 மில்லியன் பெற்றுக்கொள்ளப்பட்டது.

பன்னாட்டு நாணய நிதியத்தில் தற்போதுள்ள ஒதுக்கீPடுகளின் விகிதாசாரத்தில் 2021 ஓகத்து 23ஆம் திகதியன்று அதன் உறுப்புரிமை நாடுகளுக்கிடையில் ஐ.அ.டொலர் 650 பில்லியனிற்கு சமனான மொத்த சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீடொன்றினை பன்னாட்டு நாணய நிதியம் பகிர்ந்தளித்தது. இது கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் ஏற்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத நெருக்கடியின் போது உலகளாவிய பொருளாதாரத்திற்கு மேலதிக திரவத்தன்மையினை வழங்கி நாட்டிற்கான வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளை குறைநிரப்புவதுடன் செலவுமிக்க உள்நாட்டு மற்றும்ஃஅல்லது வெளிநாட்டுப் படுகடனில் தங்கியிருப்பதனைக் குறைக்கின்றது. சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீட்டினால் வழங்கப்பட்ட வசதியினை நாடுகள் தங்கள் பொருளாதாரங்களை ஆதரிக்கவும் உலகளாவிய நோய்த்தொற்றினால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவும் பயன்படுத்தலாம். பன்னாட்டு நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பனவு உரிமைகள் ஒதுக்கீடு பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான கடனாகக் கொள்ளப்படாத அதேவேளை அவ்வொதுக்கீட்டில் எவ்வித குறிப்பிட்ட நிபந்தனைகளும் உள்ளடக்கப்படவில்லை. முன்னதாக, பன்னாட்டு நாணய நிதியம் 2009இ 1979-81 மற்றும் 1970-72 இல் உறுப்புரிமை நாடுகளுக்கு சிறப்பு எடுப்பனவு உரிமைகளை ஒதுக்கீடு செய்திருந்தது.

வங்காளதேச வங்கியிலிருந்து ஐ.அ.டொலர் 200 மில்லியன் கொண்ட வெளிநாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல் வசதி இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் நிதியியல் ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் நோக்கில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த பரஸ்பர பரிமாற்றல் வசதி மூன்று மாத காலப்பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அதே காலப்பகுதியுடன் இரண்டு தடவைகள் நீடிக்கும் சாத்தியப்பாட்டினைக் கொண்டு ஐ.அ.டொலர் 50 மில்லியன், ஐ.அ.டொலர் 100 மில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 50 மில்லியன் என்றவாறு மூன்று தொகுதிகளாகப் பகிர்ந்தளிக்கப்படும். முதல் இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளன.

இலங்கை அரசு விரைவில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்தான கூட்டுக்கடன் வசதியின் எஞ்சிய தொகையினைப் பெற எதிர்பார்க்கின்றது. இந்தப் பகிர்ந்தளிப்பு சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்தான ஐ.அ.டொலர் 1.3 பில்லியன் மொத்தக்  கூட்டுக்கடனை நிறைவு செய்கின்றது.

இந்த வெளிநாட்டுச் செலாவணிப் பெறுகைகள் நாட்டிற்கான மொத்த அலுல்சார் ஒதுக்குகளை மேம்படுத்துவதில் துணைபுரியும் வேளையில், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் திரவத்தன்மை நிலைமைகளை மேலும் வசதிப்படுத்த மத்திய வங்கியினை இயலச்செய்கின்றது. அரசிற்கான படுகடனல்லாத வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் உட்பட எதிர்பார்க்கப்படும் உட்பாய்ச்சல்களின் பொருண்மியமாதலுடன் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கான வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகள் மேலும் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Published Date: 

Tuesday, August 31, 2021