உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மை மீதான இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமானிய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களின் அறிக்கை

கடந்த சில நாட்களாக, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையின் ஊகிக்கப்பட்ட பற்றாக்குறையொன்று தொடர்பில் பல்வேறுபட்ட தனிநபர்கள் மற்றும் ஊடகங்களினால் கரிசனைகள் எழுப்பப்பட்டிருந்ததுடன் இவை வங்கிகளை இறக்குமதிகளுக்கு வசதிப்படுத்துவதிலிருந்தும் தடுத்திருந்தன. சில ஊடகங்களினால் வெளியிடப்பட்ட அல்லது பரப்பப்பட்ட அறிக்கைகள் மிகவும் எதிர்மறையான கண்ணோட்டத்தை குறித்திருந்ததுடன் அவை நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கவல்லன. இவ்விடயம் தொடர்பிலான உண்மையான நிலையினைத் தெளிவுபடுத்துவதற்காக நான் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றேன்.

கடந்த பல ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான வெளிநாட்டு நாணயப் படுகடன்களின் காரணமாக, 2019/2020இல் தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்ட நேரத்திலும் கூட, குறுகிய காலத்தில் நிலுவையாகவுள்ள படுகடன் பணிக் கொடுப்பனவு கடப்பாடுகளினைத் தீர்ப்பதில் இலங்கையின் இயலுமை தொடர்பில் பாதகமான ஊகங்கள் காணப்பட்டன. அத்தகைய ஊகங்களுக்கு மத்தியிலும், குறிப்பாக நமது சுற்றுலாத்துறைக் காசுப் பாய்ச்சல்கள் மீதான கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் விளைவாக ஏற்பட்ட மேலதிக அழுத்தங்களுக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்கம் அதன் அனைத்து வெளிநாட்டுப் படுகடன் பணிக் கடப்பாடுகளையும் உரிய நேரத்தில் பூர்த்தி செய்யுமென்பதனை உறுதிப்படுத்துவதற்கான தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதன் ஊடாக இலங்கையானது தனது அனைத்து முதிர்ச்சியடைந்த கடப்பாடுகளையும் நிறைவேற்றும்; அப்பழுக்கற்ற பதிவைப் பேணியிருந்தது.

குறைவடைந்த வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களுக்கு மத்தியில் இக்கடினமான பணியைச் செய்வதற்கு நாட்டை இயலுமைப்படுத்துவதற்கு, இலங்கை தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருந்தது. கொவிட்-19 இன் பல்வேறு அலைகளிலிருந்து தோற்றம்பெற்ற தொடர்ச்சியான சவால்களைக் கருத்திற்கொண்டு, அத்தியாவசியமற்றதும் அவசரமற்றதுமான இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் இடமுண்டென மத்திய வங்கி கருதினாலும், இவ்வாறான சில கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டுள்ளன.

கடந்த 1½ ஆண்டுகளில் அரசாங்கமும் மத்திய வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் வெளிநாட்டுப் படுகடன் விகிதத்தினை 40 சதவீதமாகவும் வெளிநாட்டுப் படுகடனின் முகப் பெறுமதியினை 2019 இறுதியின் ஐ.அ.டொ. 34.1 பில்லியனிலிருந்து 2021 மாச்சு இறுதியில் ஐ.அ.டொ. 32.2 பில்லியனிற்கு கணிசமாகக் குறைக்க முடிந்திருந்த அதேவேளை அதன் முதிர்ச்சியடைந்த படுகடன் பணிக் கொடுப்பனவு கடப்பாடுகளை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்திருந்தது. ஐ.அ.டொ. 10 பில்லியன் கொண்ட நீண்டகால வணிகப் பொருள் வர்;த்தக இடைவெளியானது இலங்கையை பாதிக்கப்படக்கூடிய நிலைக்கு இட்டுச்செல்வதனால் கவனமான கொள்கை நடவடிக்கைகளின் ஊடாக அதனை நிவர்த்தி செய்வது இலங்கைக்கு சிறந்த வகையில் நன்மை பயக்குமென நான் நம்புகின்றேன். இதனைச் செய்கின்ற வேளையில், எமது படுகடன் பணிக் கொடுப்பனவு  கடப்பாடுகளை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வதுடன் நாட்டின் நற்பெயருக்கும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை தொடர்பில் முதலீட்டாளர் நம்பிக்கையின் மீது ஏற்படக்கூடிய மேலதிக பாதிப்புக்களைத் தடுப்போம்.

அரசியல் காரணங்களினால் ஊக்குவிக்கப்பட்ட இலங்கைச் சமூகத்தின் சில பகுதியினர் செலாவணி வீதத்தின் எதிர்காலப் பாதை மற்றும் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் இயலுமை குறித்து தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற மோசமான ஊகங்களையும் நாங்கள் அவதானித்திருக்கின்றோம். இத்தகைய சுய விருப்பு சார்ந்த ஊகங்கள் தேவையற்றவையாகவும் அவை பொது மக்களுக்கும் வணிக சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கதக்கனவாகவுமுள்ளன. இத்தகைய ஊகக் கருத்துக்கள் வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சல் என்பவற்றிற்கிடையில் சில அவசியமற்ற குறுங்கால சமமின்மைகளைத் இயற்கையாகவே தோற்றுவித்திருக்கின்றன. இருப்பினும், வர்த்தகம் முறையற்று சீர்குலையாதிருக்குமென்பதனையும் இறக்குமதிச் செயற்பாட்டில் இடைநிலை மற்றும் மூலதன பொருட்களின் இறக்குமதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதனையும் அரசாங்கமும் மத்திய வங்கியும் உறுதிப்படுத்தியுள்ளன என்பதனையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். மொத்த இறக்குமதிப் பெறுமதிகள் 2021 மாச்சு, ஏப்பிறல் மற்றும் மே மாதங்களில் மாதாந்த சராசரியாக ஐ.அ.டொ. 1.7 பில்லியன் கொண்ட குறிப்படத்தக்க உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டன. இம்மாதங்களில் காணப்பட்ட உயர்ந்தளவான இறக்குமதிப் பெறுமதிகள், குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள்,  வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டதற்கு மாறாக மேலதிகமான அசௌகரியங்களுக்கு ஆளாகவில்லை என்பதனைக் காண்பிக்கின்றன. மத்திய வங்கி தற்போது அனைத்து வர்த்தக வங்கிகளின் பங்களிப்புடன் இறக்குமதி மற்றும் வெளிநாட்டு ஒதுக்குகளை நியாயாதிக்க முறையில் முகாமை செய்துகொண்டிருக்கின்றது. அடுத்த சில மாதங்களில் காசுப்பாய்;ச்சல்கள் மேம்படவுள்ளதனால், மத்திய வங்கியானது எதிர்கால கொள்கைப் பதிலிறுப்புக்களைத் தீர்மானிப்பதில் தேசிய ஐந்தொகை மற்றும் வெளிநாட்டுப் பேரண்டப் பொருளாதார நிலைமைகள் என்பவற்றை மதிப்பீடு செய்யும்.

காசுப்பாய்ச்சல்களின் பொருந்தாத்தன்மையை முகாமை செய்வது தொடர்பில் இடைக்கால தீர்வொன்றாக, வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் உறுதித்தன்மை பேணப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக மத்திய வங்கி வங்கித்தொழில் துறையுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றது. மத்திய வங்கியினால் வங்கிச் சமூகத்தின் முக்கிய அதிகாரிகளுடனான வழக்கமான கூட்டங்கள் நடாத்தப்பட்டுவருவதுடன் வங்கித்தொழில் கமூகம் தங்களது உட்பாய்ச்சல்களுக்குள் வெளிப்பாய்ச்சல்களை முகாமைசெய்கின்ற அதேவேளையில், அத்தியாவசிய மற்றும் அவசர இறக்குமதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் ஊகத் தன்மையிலான கட்டளைகளை ஊக்கமிழக்கச் செய்வதற்கும் பரஸ்பரமாக இணங்கியுள்ளது. வங்கிகளின் இத்தகைய முன்மதியுடைய நடவடிக்கைகளே சொந்த நலன்களில் ஆர்வம் கொண்ட தரப்பினர்களினால் திரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதி வருமானத்தின் கட்டாயமான மாற்றுதல் மற்றும் ஊக நடவடிக்கைகளை குறைப்பதற்கான ஒழுங்குமுறை வழிமுறைகள் என்பவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளின் ஊடாக இலங்கை மத்திய வங்கியானது வங்கித்தொழில் சமூகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்திருந்தது. மத்திய வங்கியானது வர்த்தக வங்கிகள் மற்றும் கம்பனிகள் ஆகியவற்றிற்கு வெளிநாட்டு நிதியை கடனாகப் பெற்றுக்கொள்வதற்கு இயலச்செய்துள்ளமையினால் வங்கித்தொழில் முறைமையானது இறக்குமதிகளுக்கான நிதியளிப்பினை மேற்கொள்வதற்கு அலுவல்சார் ஒதுக்கின் மீது தங்கியிருக்கவேண்டியதில்லை.  இது படுகடன் பணிக்கொடுப்பனவு செயன்முறையை எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற தேசிய முயற்சிக்குத் துணைபுரிகின்றது.

தற்போது, எமது கவனமானது இலங்கையின் படுகடன் பணிக்கொடுப்பனவு கடப்பாடுகளை முகாமைசெய்வதிலுள்ளது. இது தொடர்பில், தயார்நிலையிலுள்ள சீன மத்திய வங்கியுடனான ஏறத்தாழ ஐ.அ.டொ. 1.5 பில்லியன் பெறுமதியான பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தத்தினைக் கருத்திற் கொள்ளாமல் எமது மொத்த அலுவல்சார் ஒதுக்கானது ஐ.அ.டொ. 4 பில்லியனாகக் காணப்படுகின்றது. அரசாங்கத்தின் படுகடன் பணிக்கொடுப்பனவு காரணமாக எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டு ஒதுக்குகளின் இம்மட்டத்தில் குறுங்கால தளம்பல்கள் காணப்படக்கூடிய அதேவேளை நாட்டிற்கான உட்பாய்ச்சல்களின் ஊடாக போதுமான மட்டங்களில் ஒதுக்குகளைப் பேணுவதற்கு போதியளவான நிதிசார் உபாயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவை குறிப்பாக புதிய முதலீட்டு மூலத்தினூடாக அரசாங்கத்திற்கு குறுங்காலத்திற்குள் எதிர்பார்க்கப்படும் படுகடனற்ற உட்பாய்ச்சல்கள் மற்றும் பல்புடை மற்றும் இருபுடை மூலங்களினூடாக அரசாங்கத்திற்கான ஏனைய உட்பாய்ச்சல்கள் என்பவற்றையும் உள்ளடக்குகின்றன. 2021 யூலையில் பங்களாதேஷ் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஐ.அ.டொ. 250 மில்லியன் பெறுமதியான பரஸ்பர பரிமாற்றல் வசதி, 2021 ஓகத்தில் இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஐ.அ.டொ. 400 மில்லியன் பெறுமதியான சார்க் நிதியத்தின் பரஸ்பர பரிமாற்றல் வசதி மற்றும் இந்திய இணைத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் ஐ.அ.டொ. 1,000 மில்லியன் பெறுமதியான விசேட பரஸ்பர பரிமாற்றல் வசதி போன்றன மத்திய வங்கிற்கு எதிர்பார்க்கப்படும் உட்பாய்ச்சல்களாகக் காணப்படுகின்றன. 2021 ஓகத்தில் எதிர்பார்க்கப்படும் பன்னாட்டு நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பனவு உரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஏறத்தாழ ஐ.அ.டொ. 800 மில்லியன் பெறுகைக்கு மேலதிகமாக சந்தையிலிருந்து ஏற்றுமதிப் பெறுகைகளையும் தொழிலாளர் பணவனுப்பல்களையும் மத்திய வங்கி கொள்வனவு செய்வதானது எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் ஏறத்தாழ ஐ.அ.டொ. 700 மில்லியன் படுகடனற்ற உட்பாய்ச்சல்களினூடாக அலுவல்சார் ஒதுக்குகளை கட்டியெழுப்புவதற்குத்; துணை புரியும். இலங்கை நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் முதிர்ச்சியடைந்த பெறுகைகளை திரும்பப்பெறுவதில் வதிவோரைக் கவர்ந்திழுக்கும் வழிமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வரவிருக்கும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் முதிர்ச்சியில் 30 சதவீதமான முதிர்வுகள் வதிவோரால் வைத்திருக்கப்படுவதையும் கவனத்திற் கொள்ளலாம். மேலும், வங்கித்தொழில் துறை மற்றும் கம்பனித் துறை என்பன உண்மைத் துறை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கான சலுகை வீதங்களில் அதிகளவான நிதிப்பாய்ச்சல் பெறுமதிகளையும் கண்டிருக்கின்றன. தனியார் துறை நிறுவனங்கள் அண்மையில் தளர்த்தப்பட்ட வெளிறிநாட்டுச் செலாவணி விதிமுறைகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு இணைத்தரப்பினரிடமிருந்து நிதிகளை திரட்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் இத்தகைய சில உட்பாய்ச்சல்கள் அலுவல்சார் ஒதுக்கிற்கும் சேர்க்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவாக்கமும் பொருளாதாரத்திற்கான அதிகரித்த படுகடனல்லா வெளிநாட்டு செலாவணி உட்பாய்ச்சல்களை இயலச்செய்யும்.

ஓட்டுமொத்தமாக, தற்போது உள்நாட்டு சந்தையில் அவதானிக்கப்படுகின்ற  வெளிநாட்டு நாணயத்தின் திரவத்தன்மை நிலைமைகள் தற்காலிகமானவையெனவும் இவை மிகையான ஊக நடவடிக்கைகளால் தூண்டப்படுகின்றன என்பதனையும் ஊடகங்கள், பொது மக்கள், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர் சமூகம் ஆகியோர்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகின்றேன். இது தேசிய நலனுடன் ஒத்ததாக காணப்படவில்லை என்பதனாலும் நிலைமையை தேவையற்ற இடையூறுகள் இல்லாமல் கவனமாக நிர்வகிப்பதானது ஒட்டுமொத்தமாக நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பதனாலும் சந்தையில் காணப்படுகின்ற இத்தகைய தொழிற்படுத்துனர்களை அமைதியாக இருக்குமாறும் தேவையற்ற ஊகங்களுக்கத் தூண்டுதலாக இருக்க வேண்டாமெனவும் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.

Published Date: 

Monday, June 28, 2021