உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் தொடர்பிலான படுகடன் தீரப்பனவுக் கொடுப்பனவுகள் பற்றிய தவறான செய்தி அறிக்கை

உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள்  மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் தொடர்பிலான கடன் நிலுவைகளின் தீர்ப்பனவு திட்டமிடப்பட்டு தாமதப்படுத்தப்படுகின்றது என இன்று குறித்த நாளிதழொன்று தவறான அத்துடன் அடிப்படையற்ற செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கி ஏமாற்றத்துடன் அவதானம் செலுத்துகின்றது.

உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள்  மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள், அதேபோன்ற  அரசாங்கத்தின் ஏனைய படுகடன் கடப்பாடுகள் தொடர்பிலான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள், வட்டி  மற்றும் முலதனக் கொடுப்பனவுகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுவருகின்றன என்பதனை மத்திய வங்கி முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்துகின்றது. குறிப்பிடப்பட்ட நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டவாறு அத்தகைய கொடுப்பனவுகளை தாமதப்படுத்துவதற்கு அல்லது பிற்போடுவதற்கு எவ்வித திட்டமும் கிடையாது என்பதுடன் அதற்கமைய, செய்திக் குறிப்பில்  அறிக்கையிடப்பட்ட விடயங்கள் முழுமையாக தவறானதும் அடிப்படையற்றதுமாகும். முதிர்வுறுகின்ற படுகடன் கடப்பாடுகளை தீர்ப்பனவுசெய்வதனை தாமதப்படுத்துவதன் மூலம் அதன் கறைபடியாத படுகடன் தீர்ப்பனவுச் சாதனைக்கு களங்கமேற்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்விதத்திலேனும் முனையவில்லை. 2021 ஆண்டு காலப்பகுதியில் இது வரையிலும், உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள்  மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் தொடர்பில் ஐ. அ. டொலர் 1,200 மில்லியனை அண்மித்த படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அனைத்து நிலுவையாகவுள்ள கடப்பாடுகளும் உரியகால விதத்தில் தீர்ப்பனவு செய்யப்படும்.

அத்தகைய தவறான அத்துடன் அடிப்படையற்ற செய்திகள்  பற்றி தவறாக கரிசனைகொள்ள வேண்டாமென முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகின்றது.

Published Date: 

Sunday, April 4, 2021