இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2018 மேயில் மிதமான செயலாற்றமொன்றினை எடுத்துக்காட்டியது. இறக்குமதி வளர்ச்சியினை ஏற்றுமதி வளர்ச்சி வேகத்தை விஞ்சியிருந்தமையினால் 2018 மேயில் வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறை ஒப்பீட்டளவில் வேகம் குறைந்த வீதமொன்றில் தொடர்ந்தும் விரிவடைந்தது. மாதத்தின் போது சுற்றுலாப் பயணிகள் வருவாய்கள் தொடர்ந்தும் அதிகரித்த அதேவேளை தொழிலாளர் பணவனுப்பல்கள் வீழ்ச்சியடைந்தது. சென்மதி நிலுவை நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சலானது அரசாங்கப் பிணையங்கள் சந்தையிலிருந்தான தேறிய வெளிப்பாய்ச்சல் மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான தேறிய உட்பாய்ச்சல்களின் குறைவு என்பவற்றுடன் மிதமாகவிருந்தது. 2018 மே இறுதியில் நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் மட்டம், ஐ.அ.டொலர் 8.8 பில்லியனாக இருந்தது. அதேவேளை, உள்நாட்டு மற்றும் உலக வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைகளில் அபிவிருத்திகளைப் பிரதிபலித்து இலங்கை ரூபா 2018 மே இறுதியளவில் ஐ.அ.டொலருக்கெதிராக 3.3 சதவீதத்தினாலும் 2018 யூலை 20 வரை ஆண்டின் போது இதுவரையில் 4.5 சதவீதத்தினாலும் தேய்வடைந்தது.









2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு பிணையங்கள் துறையில் பணம் தூயதாக்கலுக்கெதிரான பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வின் அடிப்படையிலும் மேற்பார்வையின் அடிப்படையிலும் கண்டறியப்பட்டவை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 யூன் 19ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.