தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)' ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஏப்பிறலின் 3.6 சதவீதத்திலிருந்து 2019 மேயில் 3.5 சதவீதத்திற்கு குறைவடைந்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் காணப்பட்ட உயர்ந்த தளமே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் 2019 மேயில் முறையே -0.4 சதவீதம் மற்றும் 6.7 சதவீதமாக பதிவாகியது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஏப்பிறலின் 1.9 சதவீதத்திலிருந்து 2019 மேயில் 2.0 சதவீதத்திற்கு சிறிதளவாக அதிகரித்தது.









இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை தொடக்கி வைத்ததுடன் நிதியியல் நிறுவனங்களின் மூத்த அலுவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான உயர்மட்ட ஆய்வரங்கு ஒன்றினையும் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2019 யூன் 19 அன்று தொடக்கி வைத்தது. இது, ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி இலுள்ள பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் உலகளாவிய வலையமைப்புக் கூட்டத்தில் 2019 ஏப்பிறல் 10ஆம் நாளன்று நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றிற்கான தேசிய வெளியீட்டுடன் தொடர்புபட்டதாகும். 