இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்களூடாக கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுவதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்காக மீள்கொடுப்பனவுக் காலங்களை நீடித்தல், சலுகை வட்டி வீதங்கள், தொழிற்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலம்தாழ்த்திச் செலுத்தும் வசதிகள், கொடுகடன் வசதிகளை மீளக்கட்டமைத்தல்/ மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இத்திட்டங்கள் உள்ளடக்குகின்றன.
பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு அதாவது சுற்றுலா, ஆடை, பெருந்தோட்டம், தகவல் தொழில்நுட்பம், ஏற்பாட்டுச் சேவை வழங்குநர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பாடசாலை வான்களைத் தொழிற்படுத்துவோர், பாரஊர்திகள், பொருட்களை கொண்டுசெல்கின்ற சிறிய ரக வாகனங்கள் மற்றும் பேருந்துக்கள் போன்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் இச்சலுகைகள் அதிகளவில் உதவின.