முனைவர் டபிள்யு. இராசபுத்ரம் (1979 – 1988)

முனைவர் வர்ண சேன இராசபுத்ரம் ஏழாவது ஆளுநரராக 1979 பெப்புருவரியில் பதவி ஏற்றுக் கொண்டதுடன் 1988 நவெம்பர் பதவியிலிருந்து விலகினார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்விகற்ற முனைவர் இராசபுத்திரம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டதாரியாவார். புள்ளிவிபரத் துறையில் சிறப்பு ஆய்வுடன் கூடிய பொருளியலில் பட்டத்தினைக் கொண்டிருந்த இவர், மத்திய வங்கியின் நேரடி ஆட்சேர்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1951இல் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட முதலாவது பட்டதாரிகளில் ஒருவராவார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்மித்-முண்ட் புலமைப்பரிசிலின் கீழும் அதனைத் தொடர்ந்து புல்பிறைற் கொடையின் கீழும் பட்டப்பின் படிப்பினை தொடங்கக் கூடியதாக இருந்தார். இதன் விளைவாக, அவர் புள்ளிவிபரத்தில் முதுமானிப் பட்டத்தினையும் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளியலில் முனைவர் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.

1968இல் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1971 இலிருந்து பல ஆண்டுகளுக்கு பன்னாட்டு தொழில் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு அமைப்புக்களில் பணியாற்றுவதற்காக மத்திய வங்கி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். முனைவர் இராசபுத்ரம் 1974இல் உதவி ஆளுநராகவும் அதன் பின்னர் குறுகிய காலத்தில் 1975இல் துணை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

முனைவர் இராசபுத்ரம் பன்னாட்டு நாணய நிதியத்திற்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக 1976 இலிருந்து 1979 வரை தொழிற்பட்டார். அதன் பின்னர் அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். நாடு மூடிய பொருளாதாரத்திலிருந்து திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு நகர்ந்தமையினால் அவரின் தலைமைத்துவமும் வங்கி மற்றும் பொருளாதாரத்திற்கான வழிகாட்டலும் இலங்கைப் பொருளாதாரத்தின் மிக இன்றியமையாத நெருக்கடியான நேரத்தில் நிகழ்ந்தது. அவரின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதேச அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் மத்திய வங்கி அதன் பன்முகப்படுத்தல் செயன்முறையினை ஆரம்பித்தது.

1988இல் ஆளுநர் என்ற அவரின் கடமையைத் துறந்த பின்னர் வெளிநாட்டுப் பணியில் பல்வேறு முக்கிய பதவிகளிலும் தொடர்ந்தும் பணியாற்றினார். அவர் பிரான்சிற்கான இலங்கையின் தூதுவராகவும் அதன் பின்னர் மலேசியாவிற்கான உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றினார். அவர் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஜெனீவாவிலும் வியன்னாவிலும் பணியாற்றினார். அத்துடன் பன்னாட்டு நிறுவனங்களில் அநேக உயர் பதவிகளை வகித்திருந்தார்.