முனைவர் எச். என். எஸ். கருணாதிலக (1988 – 1992)

 முனைவர் கல்வலாகே நெவில் சேபாலா கருணாதிலக இலங்கை மத்திய வங்கியின் எட்டாவது ஆளுநராக 1988 நவெம்பரில் பதவியேற்றுக் கொண்டதுடன் 1992 யூனில் பதவியிலிருந்தும் விலகினார். 

கண்டி றினிற்றி கல்லூரியில் கல்விகற்ற முனைவர் கருணாதிலக இலங்கை பல்கலைக்கழகத்திலிருந்து கிடைத்த நுழைவுப் புலமைப்பரிசிலுடன் 1952இல் பொருளியலில் கலைமானிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் (அப்போதைய வித்தியோதய பல்கலைக்கழகம்) ஆகியவற்றில் வருகைதரு விரிவுரையாளராக தமது பதவியைத் தொடங்கினார். 1953 மாச்சில் மத்திய வங்கியில் இணைந்து கொண்ட இவர் ஆரம்பத்தில் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தில் பணிபுரிந்தார். முனைவர் கருணாதிலக கொழும்புத் திட்டம் மற்றும் புல்பிறைட்டினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசிலூடாக பட்டப்பின் படிப்பினை ஆரம்பித்தார். இவ்வாய்ப்புக்களுடன் அவர் லண்டன் ஸ்கூல் ஒவ் எக்னமிக்ஸ்ஸிலிருந்து பொருளியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினைப் (1957) பெற்றுக் கொண்டார். 1964 – 1965இல் அவரின் புல்பிறைற் ஆராய்ச்சி அங்கத்துவத்தினூடாக எம்பிஏ (ஹாவார்ட்)  மற்றும் எம்ஏ பொருளியல் (ஹாவார்ட்) பட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்த காலப்பகுதியில் பொருளியலில் ஆராய்ச்சி அங்கத்துவத்தினைப் பெற்றுக் கொண்டார். 1972இல் முனைவர் கருணாதிலக இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளியலில் முனைவர் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.

1975இல் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராக விளங்கிய இவர் 1978இல் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். மத்திய வங்கியில் அவர் பதவி வகித்த காலத்தில் முனைவர். கருணாதிலக அவரது பணிகளையும் நிபுணத்துவத்தினையும் நிதியியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பணிப்பாளர் சபை, வங்கியாளர் பயிற்சி நிறுவகம் (தற்பொழுது இலங்கை வங்கியாளர் நிறுவகம்), அமைச்சரவை உபகுழு மற்றும் பல அரச மற்றும் தனியார் துறை அமைப்புக்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கும் வழங்கினார்.

அவர் பன்னாட்டு அபிவிருத்திக்கான சங்கத்தின் தலைவராகவும் (இலங்கை விடயத்தில்) இலங்கை பொருளியல் சங்கத்தின் தலைவராகவும் இலங்கை பொருளாதாரச் சஞ்சிகையின் முதலாவது ஆசிரியராகவும் விளங்கினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளுக்குப் புறம்பாக அவர் பொருளாதாரம் மற்றும் வங்கித்தொழில் தொடர்பில் அநேக நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார்.