திரு. ஜே.பி.ஆர். கருணாரத்ன

துணை ஆளுநர்

திரு. ஜே.பி.ஆர். கருணாரத்ன வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல், நாணய முகாமைத்துவம், பொதுப் படுகடன், செயலகம், நிதி, கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணித்தல் துறைகளில் வேறுபட்ட பதவிகளில் இலங்கை மத்திய வங்கியில் 33 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சேவையினைக் கொண்டுள்ளாhர். இவர், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை பணிப்பாளராகவும், நாணயக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளதுடன், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை வலுப்படுத்துவதை நோக்கிப் பங்களித்து, வங்கியல்லா நிதியியல் நிறுவனத் துறையினை ஒன்றுதிரட்டுவதில் முதன்மைப் பங்காற்றியுள்ளார். துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. கருணாரத்ன உதவி ஆளுநராக பதவி வகித்ததுடன் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம், நிதித் திணைக்களம், வசதிகள் முகாமைத்துவத் திணைக்களம் என்பவற்றிற்கு பொறுப்பாகவிருந்தார். உதவி ஆளுநர் என்ற வகையில் திரு. கருணாரத்ன பல ஏனைய திணைக்களங்களையும் அதாவது, பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல், வெளிநாட்டுச் செலாவணி, நாணயம், பிரதேச அபிவிருத்தி, சட்டம் மற்றும் இணங்குவித்தல், இடர்நேர்வு முகாமைத்துவம், வங்கித்தொழில் கற்கைகளுக்கான நிலையம், பாதுகாப்புப் பணிகள் மற்றும் அலுவலர் பணிகள் முகாமைத்துவம் ஆகிய திணைக்களங்களை முன்னர் மேற்பார்வை செய்துள்ளார்.

இவர், நாணயச் சபைக்கான செயலாளராகவும் சபை இடர்நேர்வுக் குழு, நாணயச் சபை ஆலோசனை, கணக்காய்வுக் குழு மற்றும் ஒழுக்கவியல் குழு என்பவற்றுக்கான செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், இவர் பாதுகாப்பு அமைச்சுக்கு விடுவிக்கப்பட்டிருந்தார். அங்கு இவர், நிதியியல் ஆலோசகராகப் பணியாற்றினார். 2009இல் உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்களின் குழுவின் செயலகத்திற்கான முதன்மை தொழிற்படுத்தல் அலுவலராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தர நியமங்கள் கண்காணித்தல் சபையின் தலைவராக இவர் பணியாற்றியுள்ளதுடன், இவர் இலங்கை சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் சபை உறுப்பினராக இருந்துவருகின்றார். அவரது தொழில்சார் பணியினை அங்கீகரித்து இலங்கை சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்கள் தேசிய முகாமைத்துவ கணக்கீட்டு சமவாயம் 2023 நிகழ்வில் CMA Sri Lanka Business Excellence  விருது திரு. கருணாரத்னவிற்கு வழங்கப்பட்டது. இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் வளவாளரொருவராக அவரது நீண்ட தொழில் மற்றும் பங்களிப்பு என்பவற்றை அங்கீகரித்து 2019இல் இலங்கை வங்கியாளர் நிறுவகத்தில் நீண்டகால சேவை விருதினையும் அவர் பெற்றுக்கொண்டார்.

“தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் (SEACEN) நாடுகளில் பாசல் III சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நடைமுறைப்படுத்தல்” பற்றிய ஆராய்ச்சிக் கருத்திட்டத்தின் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் மலேசிய கருத்திட்ட அணித் தலைவராகவும் இருந்ததுடன் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் அமைப்பு 2013இல் ஆராய்ச்சியினை வெளியிட்டது. இவர் தற்போது பல உள்ளக மற்றும் வெளிவாரிக் குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றுகின்றார்.

திரு. கருணாரத்ன அவுஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து நிதியியல் வணிக முதுமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப் பின் படிப்பு டிப்ளோமாவையும் முதல் வகுப்புடன் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றவராவார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் காணக்காளர் நிறுவகத்தின் (CIMA) சக உறுப்பினரும் பட்டயம்பெற்ற உலகளாவிய முகாமைத்துவக் கணக்காளருமாவார். மேலும், இவர் இலங்கை சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினரொருவருமாவார்.