திரு. ஏ.ஏ.எம். தாசிம்
துணை ஆளுநர்
திரு. ஏ.ஏ.எம். தாசிம், வங்கித்தொழில் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல், பன்னாட்டுத் தொழிற்பாடுகள், தொடர்பூட்டல், கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதியம், நிதி, இடர்நேர்வு முகாமைத்துவம், வைப்புக் காப்புறுதி, பாதுகாப்புப் பணிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வேறுபட்ட பதவிகளில் இலங்கை மத்திய வங்கியில்; 31 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சேவைக் காலத்தையும் கொண்டுள்ளார். இவர் வங்கி மேற்பார்வை பணிப்பாளராகவும், பன்னாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளராகவும், தொடர்பூட்டல் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளதுடன், சட்டக் கட்டமைப்பு, ஆளுகையினை வலுப்படுத்துதல், மூலதன மற்றும் திரவத்தன்மைக்கான பாசல் III பன்னாட்டு ரீதியான வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் வங்கித்தொழில் துறைக்கான பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமங்களை (IFRS) பின்பற்றுதல், அவற்றினூடாக நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்தல் என்பவற்றை நோக்கிப் பங்களித்துள்ளார். மேலும், பன்னாட்டுத் தொழிற்பாடுகள் என்ற வகையில் திரு. தாசிம் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கு முதலீடுகள் முகாமைத்துவம் அத்துடன் செலாவணி வீத முகாமைத்துவம் என்பவற்றுக்குப் பொறுப்பாகவிருந்தார். திரு. தாசிம் கொடுப்பனவு முறைமைகள் தொடர்பிலும் அனுபவத்தினையும் அறிவினையும் பெற்றுள்ளதுடன் காசோலை பிம்பப்படுத்தல் மற்றும் சுற்றோட்டக் குறைப்பு முறைமையினை நடைமுறைப்படுத்தலிலும் ஈடுபட்டார். இதற்கு மேலதிகமாக, நாணயக் கொள்கை, நிதியியல் முறைமை உறுதிப்பாடு, பன்னாட்டு ஒதுக்குகள் போன்ற துறைகள் உள்ளடங்கலாக பல உயர்மட்ட உள்ளகக் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.
துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. தாசிம், உதவி ஆளுநர் பதவியினை வகித்ததுடன் வங்கி மேற்பார்வைத் திணைக்களம் உள்ளடங்கலாக பல முக்கிய திணைக்களங்களுக்குப் பொறுப்பாகவிருந்தார். ஆளும் சபை, நாணயக் கொள்கைச் சபை, கணக்காய்வுக் குழு, சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழு, ஒழுக்கவியல் குழு மற்றும் நிதியியல் துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு ஆகியவற்றுக்கான செயலாளராகவும் இவர் பணியாற்றினார்.
தற்போது, திரு. தாசிம் இலங்கை ஏற்றுமதிக் கொடுகடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சபை உறுப்பினராகவும் இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் உப தலைவராகவும் இருக்கின்றார். மேலும், இவர் இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் மற்றும் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
திரு. தாசிம் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவகத்தின் இணை உறுப்பினராவதுடன், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப் பின் படிப்பு நிறுவனத்திலிருந்து வியாபார நிருவாகத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் பேர்க்லேயில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஹாஸ் வியாபாரக் கல்லூரியிலிருந்து தங்க ஒதுக்கு முகாமைத்துவம் பற்றிய கற்கைநெறியினையும் நிறைவுசெய்துள்ளார். ஜோர்ன் எப் கென்னடி அரசாங்க கல்லூரியினால் நடாத்தப்பட்ட அபிவிருத்தியில் தலைவர்கள் பற்றிய நிறைவேற்றுத் தர கற்கைநெறியினை வெற்றிகரமாக நிறைவுசெய்து, ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராகவும் இவர் இருக்கின்றார்.