முனைவர். பி. நந்தலால் வீரசிங்க

ஆளுநா்

முனைவர் பி. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் 17ஆவது ஆளுநராவா். முனைவர் வீரசிங்க நாணய மற்றும் செலாவணி வீதக் கொள்கையில் நீடித்த அனுபவத்துடன் கூடிய தொழில்சார் மத்திய வங்கியாளரொருவர் ஆவார். முனைவர் வீரசிங்க பன்னாட்டு நாணய நிதியத்தில் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றிய வேளையில் 2011 செத்தெம்பர் 27ஆம் நாளன்று துணை ஆளுநராக பதவியுயர்த்தப்பட்டு 2012 செத்தெம்பர் 01ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். முனைவர் வீரசிங்க பொருளியலில் முனைவர் பட்டத்தினையும் முதுமானிப் பட்டத்தினையும் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்தும் விஞ்ஞானமானிப் பட்டத்தினை இலங்கை களனி பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.

துணை ஆளுநராக முனைவர் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு மற்றும் வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவக் குழு என்பனவற்றின் தலைவராக பணியாற்றியுள்ளதுடன் பொருளாதார ஆராய்ச்சி, புள்ளிவிபரம், பன்னாட்டுத் தொழிற்பாடுகள், உள்நாட்டுத் தொழிற்பாடுகள், பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு, செலாவணிக் கட்டுப்பாடு, நாணயம் மற்றும் தொடர்பூட்டல் ஆகிய திணைக்களங்களை மேற்பார்வை செய்தார்.

முனைவர் வீரசிங்க 2010 சனவரியிலிருந்து 2012 ஓகத்து வரை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பன்னாட்டு நாணய நிதியத்திற்கு விடுவிக்கப்படுவதற்கு முன்னர் 2009 ஓகத்திலிருந்து 2012 செத்தெம்பர் வரை உதவி ஆளுநராகப் பணியாற்றியதுடன் அதேபோன்று 2007 சனவரி தொடக்கம் 2009 ஓகத்து வரை முதன்மை பொருளியலாளராகவும் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

முனைவர் வீரசிங்க கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமானிப்பட்ட பாடநெறிக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் மலேசியாவின் தென்கிழக்காசிய மத்திய வங்கி நிலையத்தில் வருகைதரும் ஆராய்ச்சிப் பொருளியலாளராகவும் இருந்திருக்கின்றார். அவர் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்திற்கு வருகைதரும் ஆராய்ச்சி சக அங்கத்தவராகவும் பணியாற்றியிருக்கின்றார். இவர் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் கிறோபோர்ட் பொதுக் கொள்கைக் கல்லூரியின் பிரயோக பேரண்டப் பொருளாதாரப் பகுப்பாய்வு நிலையத்தின் மதியுரைச் சபை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

அவர் பொருளாதார விடயங்கள் மீதான பல அமைச்சரவை துணைக் குழுக்களையும் பிரதிநிதித்துவம் செய்துள்ளதுடன் வலுக் கொள்வனவு உடன்படிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, நிதி திட்டமிடல் அமைச்சின் நிதியியல் துறைக் கண்காணிப்புக் குழு, தனியார் துறை அபிவிருத்திக்கான சந்தை நிகழ்ச்சித்திட்டத்தின் மீதான வழிகாட்டல் குழு, பெற்றோலிய சுத்திகரிப்புச் செயற்றிட்ட இணைப்புக் குழு என்பனவற்றின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் நிலைபெறத்தக்க சக்தி அதிகாரசபை மற்றும் முதலீட்டுச் சபை என்பவற்றின்; முகாமைத்துவச் சபைப் பணிப்பாளராகவும் இருந்தார். இவர் சீனா மற்றும் சிங்கப்பூருடனான இருதரப்பு வர்த்தகம் மற்றும் பணிகள் உடன்படிக்கைகளின் நிதியியல் பணிகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பாக இருந்தார்.

இவர் இலங்கை மத்திய வங்கி அலுவலர் ஆய்வுகள் உள்ளடங்கலாக பன்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சஞ்சிகைகளில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

முனைவர் வீரசிங்க 2021 சனவரியில் மத்திய வங்கியிலிருந்து மூத்த துணை ஆளுநராக ஓய்வுபெற்று பல்தரப்பு முகவராண்மைகள் மற்றும் உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களுக்கான பொருளாதார மற்றும் நிதியியல் கருமங்களுக்கான சுயாதீன ஆலோசகராகப் பணியாற்றினார்.