வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையைப் பின்பற்றுதல்
வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவை என்பது உலகம் முழுவதுமுள்ள 20 நாடுகளிலிள்ள மத்திய வங்கிகள் மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்களுக்கிடையிலான பங்குடமை மூலம் உருவாக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் உலகளாவிய சிறந்த நடத்தைக் கோட்பாடுகள் பற்றிய தொகுதியொன்றாகும். 2017இல் முதலாவதாகத் தொடங்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையானது பல்வேறு வகையான பங்கேற்பாளர்களும் இரகசியமாகவும் செயல்திறமிக்கவாறும் பரிமாற்றங்களைச் செய்வதற்கு வலுவூட்டுகின்ற ஆற்றல்வாய்ந்த, நியாயமான, திரவத்தன்மைமிக்க, திறந்த மற்றும் பொருத்தமானவாறு வெளிப்படைத்தன்மைமிக்க சந்தையினை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது. போட்டிமிகு விலையிடலை உறுதிசெய்து உயர்வான நடத்தைத் தரநியமங்களைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையானது வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைகள் தொழிற்படும் விதத்தினை மாறுதலடையச் செய்கின்றது.
ஒழுக்கநெறி, ஆளுகை, கொடுக்கல்வாங்கல்களை நிறைவேற்றுதல், தகவல்களைப் பகிர்தல், இடர்நேர்வு முகாமைத்துவம், இணங்குவித்தல் மற்றும் பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்தலும் தீர்ப்பனவு செய்தலும் ஆகிய துறைகளில் உலகளாவிய சிறந்த நடத்தைகளையும் செயன்முறைகளையும் தன்னகத்தே கொண்ட வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவையின் 55 கோட்பாடுகளும் ஏற்கனவே காணப்படும் உள்நாட்டுச் சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் விதிகள் போன்றவற்றை மாற்றீடு செய்வதை விடவும் குறைநிரப்பு செய்வதையே நோக்காகக் கொண்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் கடமைப்பொறுப்புக் கூற்றினை கீழ்வரும் இணைய இணைப்பினூடாக இலங்கை வெளிநாட்டுச் செலாவணி அமைப்பின் வலைத்தளத்தில் பார்வையிடலாம்..
இலங்கை மத்திய வங்கியின் கடமைப்பொறுப்புக் கூற்று
வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவை பின்பற்றுதல் மற்றும் இக்கோவையில் எடுத்துரைக்கப்பட்ட சிறந்த நடத்தைகளை பின்பற்றுவதற்கான கடமைப்பொறுப்பு என்பவற்றை அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் தேசிய சேமிப்பு வங்கியும் எடுத்துக்காட்டுகின்ற கடமைப்பொறுப்புக் கூற்றுகள் அவ்வங்கிகளின் உரிய வலைத்தளங்களில் பகிரங்கமாகக் கிடைக்கப்பெறுகின்றன. வெளிநாட்டுச் செலாவணிக்கான உலகளாவிய கோவைக்கான அவற்றின் கடமைப்பொறுப்பினை குறிப்பிட்டுள்ள இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலுள்ள சந்தைப் பங்கேற்பாளர்களுக்காகப் பேணப்படுகின்ற பொதுப் பதிவேட்டை https://srilankaforex.org/market-participants.php என்ற இணைய இணைப்பினூடாக இலங்கை வெளிநாட்டுச் செலாவணி அமைப்பின் வலைத்தளத்தில் பார்வையிடலாம்.