நிதியியல் உளவறிதல் பிரிவு

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது நிதி திட்டமிடல் அமைச்சின் கீழ் 2006ஆம் ஆண்டின் நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைவாக 2006 மாச்சில் தாபிக்கப்பட்டது. 

மேற்குறித்த சட்டத்தின் கீழ் அதிமேதகு சனாதிபதியினால் ஆக்கப்பட்ட கட்டளையின் நியதிகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியினுள் சுயதீன நிறுவனமொன்றாக நிதியியல் உளவறிதல் பிரிவு தொழிற்படுகின்றது. அதற்கமைய, நிதியியல் உளவறிதல் பிரிவின் ஒட்டுமொத்த குறிக்கோளானது பன்னாட்டு தர நியமங்கள் மற்றும் சிறந்த நடத்தைகளுக்கமைவாக இலங்கையில் பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் தொடர்புடைய குற்றங்களை முறியடிப்பதாகும்.  

நிதியியல் உளவறிதல் பிரிவு, இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வகுத்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் இயலளவுகள் என்பவற்றின் மீதான ஊக்க ஆற்றல் மூலம் அதன் நியதிச் சட்ட தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் அதன் தொழிற்பாடுகளை அதிகரிக்கும் பொருட்டும் வினைத்திறனுடன் செயற்படுவதற்குமாக 2007 பெப்புருவரியில் இலங்கை மத்திய வங்கியின் திணைக்களமொன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கை பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதனை தடுத்தல் சட்டம் ஒழுங்கமைப்பானது மூன்று சட்டவாக்கப் பிரிவுகளை கொண்டுள்ளது;

(அ) 2005இன் 25ஆம் இலக்க பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டம்

-  2011இன் 41ஆம் இலக்க பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டம் (திருத்தம்)
-  2013இன் 03ஆம் இலக்க பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டம் (திருத்தம்)

(ஆ) 2006இன் 05ஆம் இலக்க பணம் தூயதாக்குதலை தடுத்தல் சட்டம்

-  2011இன் 40ஆம் இலக்க பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டம் (திருத்தம்)

(இ) 2006இன் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டம்