1.  த பினான்ஸ் கம்பனி பிஎல்சி இன் பின்னணி

 1.1 1940ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 80 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளதோடு இன்னமும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அது,46 கிளைகளையும் 12 பணி நிலையங்களையும் 600 ஊழியர்களையும் கொண்டு இயங்குகின்றது.

1.2    செலிங்கோ குழுமத்தின் சில நிறுவனங்களில்,2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற சில நெருக்கடிகளினால் த பினான்ஸ் கம்பனி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

1.3    அன்றுமுதல்,பின்வருவன உள்ளடங்கலாக,இலங்கை மத்திய வங்கியினால் பல்வேறு மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

               அ.    பணிப்பாளர்களினது ஊதியங்களையும்; கம்பனியின் தொழில் நடவடிக்கைகள் மீதான அவர்களது அதிகாரங்களையும் மட்டுப்படுத்தல்

               ஆ.    ரூ.2.0 பில்லியன் வைப்புக்களை பங்குகளுக்கு மாற்றுதல்

               இ.    ரூ.1.6 பில்லியன் புதிய பங்குகளை வழங்கல்

               ஈ.      பணிப்பாளர் சபையை 04 தடவைகள் மீள்கட்டமைத்தல்

               உ.    தடயவியல் கணக்காய்வொன்றை நடாத்த கேபிஎம்ஜி கணக்காய்வாளர்களுக்குப் பணிப்புரை விடுத்தல்

               ஊ.   இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றம் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்திலிருந்து ரூ.6.0 பில்லியன் அளவுக்கு கடன் வழங்கப்பட்டது.

               எ.     நிறுவனத்தினை மீளெழுச்சிப்படுத்துவது தொடர்பாக முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல்களுக்கு வசதியளித்தல்.

               ஏ.     திரவத்தன்மை ஆதரவு வழங்கல்

 2.  நிலையான மற்றும் சேமிப்பு வைப்புக்களின் கிரமமான உட்பாய்ச்சல்களுக்கு மத்தியிலும் த பினான்ஸ் பிஎல்சி யினை எதற்காக மீள்கட்டமைப்புச் செய்ய வேண்டும்?

 2.1  த பினான்ஸ் கம்பனி மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் விளைவாக,புதிய வைப்புக்கள் தொடர்ந்தும் உட்பாய்ந்தன. இத்தகைய பணம்,வைப்புக்களின் மீளெடுப்பனவுகளுக்கும் மற்றும் வேறு தொழிற்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன.

2.2    எவ்வாறாயினும்,இத்தகைய நிதிப்பாய்ச்சல்கள் கம்பனியைத் தொடர்ந்தும் கொண்டு நடாத்தப் போதுமானதல்ல என்பதால் இலங்கை மத்திய வங்கி இதில் தலையிட்டு கம்பனியின் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுத்தது.

 3.  கடுமையான காசு வெளிப்பாய்ச்சல் இருந்திருப்பின்,இதுவரை கம்பனி எவ்வாறு தொழிற்பட்டது?

    த பினான்ஸ் கம்பனி பிஎல்சி எதிர்மறையான மூலதனத்தினைக் கொண்டிருந்த போதும் கம்பனியானது தனது திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை வைப்புக்களை ஏற்றுக்கொள்ளல் மூலம் பூர்த்திசெய்து வந்தது. எவ்வாறாயினும்,தேவையான வருமானத்தை ஈட்டுவதற்குத் தேவையான சரியான நிதித்தொழில் மாதிரியை த பினான்ஸ் கம்பனி பிஎல்சி பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கக்கூடியதல்ல.

 4.  15.02.2019ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை?

      4.1      புதிய வைப்புக்கள் ஏற்றுக்கொள்ளுதலை கட்டுப்படுத்தல் மற்றும் இலங்கை வைப்புக்களுக்கு மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட வட்டி வீதத்தில் தொடர்ந்து மாதாந்தம் வட்டி செலுத்துதல்.

4.2      வைப்புக்கள் மீளப்பெறுதலை கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றை மூன்று மாத காலப்பகுதிக்குப் புதுப்பித்தல்.

4.3      கடன்கள்,முற்பணங்கள் மற்றும் வேறு வகையான நிதியியல் வசதிகளை வழங்குதலை அல்லது பகிர்ந்தளித்தலை கட்டுப்படுத்தல்.

4.4      த பினான்ஸ் கம்பனி பிஎல்சி இன் நடவடிக்கைகளை முகாமை செய்ய முகாமைத்துவக் குழு ஒன்றை நியமித்தல்.

 5.  மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளின் அநுகூலங்கள் யாவை?

    5.1 காசு வெளிப்பாய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் குறைக்கப்பட்ட வட்டி வீதத்தில் வட்டிக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளத் தொடர்ந்தும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பதுடன் தொழிற்பாட்டுச் செலவுகளையும் மேற்கொள்ளத் தேவையான நேர்மறைக் காசுப்பாய்ச்சல்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. இது த பினான்ஸ் கம்பனி பிஎல்சி அதன் திரவத்தன்மையை குறுகிய காலத்திற்குப் பேணுவதற்கும் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை ஆய்வு செய்வதற்கான வழிவகைகளைக் கண்டறியவும் உதவும்.

5.2      முகாமைத்துவக் குழாமானது நிதித்தொழிலைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான விசேட திறமைகளைக் கொண்டுவரும் என்பதோடு அவர்கள் தற்போதைய பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்களுடன் நெருக்கமாக பணிபுரிவர். மேலும், அவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்களை அறவிட்டுக் கொள்வதில் கவனம் செலுத்துவர்.

 6.  இக்கட்டுப்பாடுகளை எவ்வளவு காலத்திற்கு நாம் தொடர வேண்டியிருக்கும்?

    உபாய முதலீட்டாளரொருவர் மூலதன உள்ளீட்டினை அடையாளம் கண்டு அதனை இறுதிப்படுத்துவதனைப் பொறுத்து,த பினான்ஸ் கம்பனி பிஎல்சியில் தொடர்ந்தும் தமது வைப்பைப் பேணுவதற்கு வைப்பாளர்கள் தரும் ஆதரவோடு இக்கட்டுப்பாடு தொடரலாம். அதேவேளை,ஏதேனும் ஒரு முதலீட்டாளர் த பினான்ஸ் கம்பனி பிஎல்சி ஐ ஒரு சாத்தியமான ஆற்றல் வாய்ந்த முதலீட்டு முன்மொழிவாகக் கருதினால்,நிறுவனத்தின் காசுப்பாய்ச்சல்கள் முன்னேற்றமடைந்து உறுதித்தன்மைக்குத் திரும்பும். அப்பொழுது இலங்கை மத்திய வங்கி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதைக் கருத்தில் கொள்ளும்.

 7.  ஊழியர்களின் நிலை எவ்வாறு காணப்படும்?

       இதுவும் உபாய முதலீட்டாளரை அடையாளம் காணுவதில் தங்கியுள்ளது.

 8.  வைப்பாளர்களின் வட்டி வருமானத்திற்கு யாது நிகழும்?

       மாற்றப்பட்ட வட்டி வீதத்தில்,மாதாந்த வட்டி செலுத்தப்படும்.

 9.  வைப்பாளர்களின் வகிபாகம் யாது?

   வைப்பாளர்கள் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கிக்கும் த பினான்ஸ் கம்பனி பிஎல்சி இன் முகாமைத்துவத்திற்கும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.