2018 பெப்புருவரியில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2018 சனவரியின் 5.4 சதவீதத்திலிருந்து 2018 பெப்புருவரியில் 3.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2017 பெப்புருவரியில் நிலவிய உயர்ந்த தளம் அதேபோன்று 2018 பெப்புருவரியில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சி என்பனவற்றின் சாதகமான நிரம்பல் நிலைமைகளின் காரணமாக 2018 பெப்புருவரியில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் மிகக்கூடியளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 சனவரியின் 7.6 சதவீதத்திலிருந்து 2018 பெப்புருவரியில் 7.2 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2018 சனவரியின் 125.8 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 பெப்புருவரியில் 123.7 சுட்டெண் புள்ளிகளுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு உணவு விடயங்களில் குறிப்பாக, காய்கறிகள், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், அரிசி மற்றும் பெரிய வெங்காயம் என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே பெருமளவிற்குக் காரணமாகும். அதேவேளை, தொடர்பூட்டல் துணைத் துறை தவிர்ந்த உணவல்லா வகைகளிலுள்ள அனைத்துத் துணைத் துறைகளிலும் விலை அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் 2017 செத்தெம்பரிலிருந்து அவதானிக்கப்பட்டுவரும் வீழ்ச்சிடைந்து செல்லும் போக்கைத் தொடர்ந்தும் பின்பற்றியது. ஆகவே, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் 2018 சனவரியின் 2.1 சதவீதத்திலிருந்து 2018 பெப்புருவரியில் 2.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கத்தின் ஆண்டுச் சராசரி 2018 சனவரியின் 4.5 சதவீதத்திலிருந்து 2018 பெப்புருவரியில் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, March 21, 2018