2018 மாச்சில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் 2017 நவெம்பரிலிருந்து தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினைத் தொடர்ந்தது. எனவே ஆண்டுக்கு ஆண்டு தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் முதன்மைப் பணவீக்கம் 2018 மாச்சில் 2018 பெப்புருவரியின் 3.2 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் இது 2016 ஏப்பிறலிற்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்த அளவுமாகும். 2018 மாச்சில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சிக்கு சாதகமான வழங்கல் நிலைமைகள் காரணமாக அமைந்து 2018 மாச்சில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் வீழ்ச்சியடைய உதவியது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 பெப்புருவரியின் 7.2 சதவீதத்திலிருந்து 2018 மாச்சில் 6.7 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2018 பெப்புருவரியில் 123.7 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 மாச்சில்; 122.8 சுட்டெண் புள்ளிகளுக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு உணவு விடயங்களில் குறிப்பாக, காய்கறிகள், பெரிய வெங்காயம், அரிசி மற்றும் சின்ன வெங்காயம் என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே பெருமளவிற்குக் காரணமாகவிருந்த வேளையில் வெறிக் குடிவகைகள், புகையிலை, போக்குவரத்து மற்றும் பல் வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத் துறைகளில் சிறிதளவு விலை அதிகரிப்புக்கள் அவதானிக்கபட்டன.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் 2017 செத்தெம்பரிலிருந்து அவதானிக்கப்பட்டுவரும் வீழ்ச்சிடைந்து செல்லும் போக்கைத் தொடர்ந்தும் கொண்டிருந்ததுடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 பெப்புருவரியின் 2.0 சதவீதத்திலிருந்து 2018 மாச்சில் 1.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வேர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2018 பெப்புருவரியின் 4.1 சதவீதத்திலிருந்து 2018 மாச்சில் 3.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Monday, April 23, 2018