இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு, காப்புறுதித் துறையில், பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வு மேற்பார்வையின் அடிப்படையில் கண்டறியப்பட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 ஓகத்து 01ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.

காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி தமயந்தி பர்னாந்துவும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர், திரு. டி. எம். ரூபசிங்கவும் தொடர்பான நிறுவனங்களின் சார்பில், பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பான தேசிய இணைப்புக் குழுவின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருமான முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவரான திரு.மனோ தித்தவெல்ல ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்ததினை கையொப்பமிட்டனர்.

உள்நாட்டு உறுதிப்பாட்டிற்கும் அதேபோன்று உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் முறைமைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் இவற்றுடன் இணைந்த நிதியியல் குற்றங்களைத் தடுப்பதற்காக நாட்டின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கட்டமைப்புடன் இணங்கிச் செல்வது காப்புறுதித் துறை பங்கேற்பாளர்களுக்கும் மிக இன்றியமையாததாகும். இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு காப்புறுதித் துறையினை

ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்யும் நிறுவனம் என்ற ரீதியில் இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாத நிதியிடலுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கட்டமைப்புடன் இத்துறை இணங்கிச் செல்வதனை உறுதிப்படுத்துவதற்காக மேற்பார்வையில் கண்டறியப்பட்ட விடயங்களை நிதியியல் உளவறிதல் பிரிவுடன் பகிர்ந்து கொள்ளும்.

பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்காக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் பொருட்டு நிதியியல் உளவறிதல் பிரிவு 37 வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடனும் அதேபோன்று இலங்கைச் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், இலங்கைப் பொலிஸ் மற்றும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு போன்ற 6 உள்நாட்டு அரச முகவராண்மைகளுடனும் ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இக்காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமானது பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல், மேற்பார்வை தொடர்பில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இரு நிறுவனங்களினதும் ஒழுங்குமுறைப்படுத்தல்/ மேற்பார்வை இயலளவினை மேம்படுத்துவதற்கு உதவும்.

 இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. தமயந்தி பர்னாந்துவும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு. டி. எம். ரூபசிங்கவும் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைமாற்றிக் கொள்கின்றனர். பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பான தேசிய இணைப்புக் குழுவின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருமான முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் திரு. சி. ஜே. பி. சிறிவர்த்தன, இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் திரு. எச். ஏ. கருணாரத்ன,

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவரான திரு.மனோ தித்தவெல்ல ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். 

 

முழுவடிவம்

 

Published Date: 

Monday, August 27, 2018