வழிகாட்டல் 2018 - 2018 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

2017ஆம் ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது. கொந்தளிப்பான வானிலை நிலைமையின் காரணமாக பொருளாதார ரீதியான தாக்கங்களை நாம் கண்டிருக்கிறோம். வரட்சியும் வெள்ளமும் வேளாண்மை நடவடிக்கைகளையும் வேளாண்மையினை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் நடவடிக்கைகளையும் தடங்கலுறச் செய்தன. இம்மோசமான வானிலை நிலைமைகளிலிருந்து கசிந்த தாக்கங்கள் பொருளாதாரத்தின் மற்றைய துறைகளையும் பாதித்தன. இதன் விளைவாகப் பொருளாதார வளர்ச்சியானது ஆண்டின் தொடக்கத்தில் குறைவானதாகவும் எறிவு செய்யப்பட்டதிலும் பார்க்கக் குறைவானதாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்ட மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கை நிலையும் அதேபோன்று அரசாங்கத்தின் ஒப்பீட்டு ரீதியான இறுக்கமான இறைக் கொள்கை நிலையும் அரச மற்றும் தனியார் முதலீட்டுச் செலவிடலை ஓரளவிற்குப் பாதித்து தாழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்தன. நுகர்வோர் விலைப் பணவீக்கம் அதிகரித்தமைக்கு, வானிலையுடன் தொடர்பான உள்நாட்டு வழங்கல்களில் காணப்பட்ட தடங்கல்கள், மறைமுக வரிகளுக்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களின் அதிகரித்த விலைகள் என்பனவற்றுடன் சேர்ந்து காணப்பட்ட உயர்ந்த உணவு விலைகள் முக்கிய காரணமாக அமைந்தது. இது பணவீக்க எதிர்பார்ப்புக்களை வழிநடத்துவதற்கான எமது முயற்சிகளை சவாலுக்குட்படுத்தியது. மத்திய வங்கியினால் இறுக்கமான நாணயக் கொள்கை நிலை பேணப்பட்டமைக்கிடையிலும் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட மட்டங்களுக்கு வீழ்ச்சியடைவதற்கு முன்னதாக 2017இன் பெரும்பாலான காலப்பகுதியில் நாணயக் கூட்டுக்களின் வளர்ச்சி உயர்வாகவே காணப்பட்டது. மத்திய வங்கியின் நெகிழ்ச்சித்தன்மை கொண்ட செலாவணி வீதக் கொள்கையின் காரணமாக ஏற்றுமதிகளில் உறுதியான மீட்சிக்குரிய சமிக்ஞைகளை நாம் கண்ட போதும், பெருமளவில் இறக்குமதிகள் மீதான செலவினத்தில் வானிலை நிலைமையினால் தூண்டப்பட்ட அதிகரிப்புக்களின் விளைவாக வர்த்தகக் கணக்கு தொடர்ந்தும் பாதிக்கப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சி வெளிநாட்டு நடைமுறைக் கணக்கில் விரிவடைந்து செல்லும் வர்த்தகப் பற்றாக்குறையினை ஈடுசெய்வதில் ஒரு குறைவிற்கு வழிவகுத்தது. இறைத் துறை அரசிறைச் சேகரிப்பின் நியதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காட்டியதெனினும் வானிலையுடன் தொடர்பான இறைச் செலவுகள் மற்றும் உயர்வு வட்டிககொடுப்பனவுகள் என்பனவற்றின் முக்கிய விளைவாக 2017இல் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையில் சில பிறழ்வுகள் காணப்படக்கூடும். எதிர்பார்க்கப்பட்ட இறைத்திரட்சிப் பாதையினை அடைவதன் மீது இது மோசமான தாக்கத்தினைக் கொண்டிருக்கும் வேளையில் நாணய மற்றும் செலாவணி வீத கொள்கையினை நடத்துவதில் சிக்கலானதன்மையினையும் ஏற்படுத்துகிறது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, January 3, 2018