மத்திய வங்கி பெடரல் ரிசேர்வ் வங்கி நியூயோர்க் உடன் செய்துகொண்ட மீள்கொள்வனவு உடன்படிக்கை பற்றித் தெளிவுபடுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கி தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்வதற்காக தற்காலிக மூலமொன்றாக ஐ.அ.டொலர் திரவத்தன்மையினைப் பெற்றுக்கொள்வதற்காக பெடரல் ரிசேர்வ் வங்கி நியூயோர்க்குடன் அண்மையில் உடன்படிக்கையொன்றினைச் செய்திருக்கிறது. இவ்வசதியானது தொழில்நுட்ப சொற்பதத்தில் 'வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நாணய அதிகார சபைகளுக்கு" கிடைக்கத்தக்கதாக இருக்கும் ஓரிரவு மீள்கொள்வனவு வசதியாகும். உலகில் உள்ள அநேக மத்திய வங்கிகள் அவற்றின் குறுங்கால ஐ.அ.டொலர் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக இவ்வசதியினை நாடியிருக்கின்றன. இவ்வசதியானது, மத்திய வங்கியை வெளிநாட்டுச் செலாவணியிலமைந்த அதன் நீண்டகால முதலீட்டு சொத்துப்பட்டியலில் சடுதியான எந்தவொரு அமைப்பியல் சீராக்கத்தினையும் செய்யாமல் தேவையானபொழுது குறுங்கால நிதியிடல்களைப் பெற்றுக்கொள்வதனை இயலுமைப்படுத்துகின்றது.

கொவிட்-19 தொடர்பான இடர்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கான எதிர்பாராத திட்டங்களின் ஒரு பகுதியாக, இலங்கை மத்திய வங்கியின் ஒதுக்கில் ஐ.அ.டொலர் ஒரு பில்லியன் பெறுமதிகொண்ட ஐக்கிய அமெரிக்க திறைசேரி உண்டியல்களைப் பிணையமாக வைப்பதற்குத் தீர்மானித்து மேற்குறிப்பிட்ட வகையிலான மீள்கொள்வனவு வசதியினை பெடரல் வங்கியுடன் மேற்கொண்டிருக்கின்றது. இது தேவையான பொழுது ஐ.அ.டொலர் ஒரு பில்லியனைக் காசாகத் திரட்டிக்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியை அனுமதிக்கும். பெடரல் வங்கி வாக்குறுதியளிக்கப்பட்ட முறிகளை இலங்கை மத்திய வங்கிக்கு மீண்டும் விடுவிக்கும் என்பதனால் இலங்கை மத்திய வங்கியினால் இம்மீள்கொள்வனவு வசதிகள் தீர்ப்பனவு செய்யப்படும்பொழுது இலங்கை மத்திய வங்கியின் ஒதுக்கு நிலைமையில் எவ்வித மாற்றமும் ஏற்படமாட்டாது. இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்படுகின்ற செலவு மீள்கொள்வனவுக்கு ஏற்புடைத்தான கட்டணமாக இருக்கும் என்பதுடன் இது ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 0.35 சதவீதம் ஆகும்.

இலங்கை மத்திய வங்கி பெடரல் வங்கியுடன் இவ்வுடன்படிக்கையைச் செய்திருக்கின்றதென்பதுடன் கடன்பாடுகள் எதுவும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை மத்திய வங்கியின் தற்றுணிபின் பேரில் எந்தவொரு கட்டத்திலும் இவ்வசதியிலிருந்தும் விலகிக்கொள்ளலாம். 

ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட கொடுகடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக ஐ.அ.டொலர் 4.5 பில்லியன் பெறுமதியான ஐ.அ.டொலர் திறைசேரி பிணையங்களை இலங்கை மத்திய வங்கி பிணையளித்திருக்கின்றது என ஊடகங்களில் பரந்த அளவிற்கு காணப்படுகின்ற அறிக்கைகள் முற்றிலும் தவறானவையாகும். இலங்கை மத்திய வங்கி இவ்வசதியானது எந்த விதத்திலேனும் அசாதாரணமான ஒன்றல்ல என்பதனையும் உலகெங்குமுள்ள மத்திய வங்கிகள் தேவைப்படும்பொழுது பயன்படுத்திக்கொள்வதற்கு கிடைக்கத்தக்கதாக இருக்கும் சுயாதீனமான நிதியியல் சாதனமே இதுவென்றும் மீண்டும் வலியுறுத்திக் கூறவிரும்புகின்றது. 

Published Date: 

Friday, July 24, 2020