பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 164.1 மில்லியன் கொண்ட ஆறாவது தொகுதிக் கடனை விடுவிக்கிறது

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஐந்தாவது மீளாய்வினை நிறைவுசெய்ததுடன் சிஎஉ 118.5 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 164.1 மில்லியன்) கொண்ட ஆறாவது தொகுதியை பகிர்ந்தளிப்பதற்கு ஒப்புதலளித்திருக்கிறது. நிறைவேற்றுச் சபை ஒழுங்கினை ஓராண்டினால் 2020 யூன் வரை நீடிப்பதற்கும் எஞ்சிய பகிர்ந்தளிப்புக்களை மீள்கட்டப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது.

பல்வேறு பின்னடைவுகள் காணப்பட்டமைக்கிடையிலும், நன்கு இலக்கிடப்பட்ட 2019 இற்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக முன்னேற்றம் கண்ட இறைத்திரட்சி, மீளக்கட்டியெழுப்பப்பட்ட ஒதுக்குகள் அதேவேளை பெருமளவு செலாவணி வீத நெகிழ்ச்சித்தன்மையுடன்கூடிய முன்மதியுடைய நாணயக் கொள்கை நிலையொன்று பேணப்பட்டமை மற்றும் மீளெழுச்சியடைந்து வரும் அமைப்பியல் சீர்திருத்தங்கள் என்பனவற்றின் மூலம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியை மீண்டும் சரியான பாதையில் வெற்றிகரமாக செயற்படுத்துதற்கு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை பன்னாட்டு நாணய நிதியம் அங்கீகரித்திருக்கிறது. அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுடன் கூடிய வலுவானதும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடிய அமைப்பியல் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தும் நடைமுறைக்கிடுவதும், நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலுக்கு மாறிச்செல்லும் விதத்திலும் நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தலுடன் இணங்கிச்செல்லவதற்கும்¬¬ பேரண்டமுன்மதியுடைய கொள்கைக் கட்டமைப்பினை வலுப்படுத்தல் மற்றும் நிதியியல் துறையின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்துகின்ற விதமாக நெருக்கடியை எதிர்நோக்கத் தயாராக இருக்கும் நிலைமையினை உயர்த்திக்கொள்ளுவதற்கு நாணயவிதிச் சட்டங்களுக்கு திருத்தங்களை கொண்டுவருவதும், இன்றியமையாதன என்ற அதன் கருத்தினை பன்னாட்டு நாணய நிதியம் வலியுறுத்தியிருக்கிறது.

அண்மைய பகிர்ந்தளிப்புடன், ஒழுங்குகளின் கீழ் இதுவரை மொத்தமாக சிஎஉ 833.73 மில்லியன் (ஏறத்தாள ஐ.அ.டொலர் 1,155 மில்லியன்) கொண்ட பகிர்ந்தளிப்புக்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக கிடைத்துவரும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினை வலுப்படுத்தவும் பேரண்ட பொருளாதார உறுதிப்பாட்டினை மேம்படுத்தவும் அதேவேளை சவால்மிக்க உலகளாவிய மற்றும் உள்நாட்டு சூழலில் சந்தை தொடர்பான நம்பிக்கையினை உயர்த்தவும் நாட்டிற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Published Date: 

Tuesday, May 14, 2019