நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்துதல்

நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் முதனிலை வணிகர்களுக்கு ஏற்புடைத்தான பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகுவதற்கு தொடர்ச்சியாக தவறியமையினை பரிசீலனையில் கொண்டு, மத்திய வங்கியின் நாணயச் சபை 2020.05.28 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாக செயற்பட்டு 2020.06.01ஆம் திகதி நடைமுறைக்குவரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

இவ்வொழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை அரசாங்கப் பிணையங்கள் சந்தை மீது இடையூறுகளைக் கொண்ட தாக்கமெதனையும் ஏற்படுத்தாதிருப்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மத்திய வங்கி அவசியமான வழிமுறைகளை எடுக்கும். நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட்டின் வாடிக்கையாளர்களினதும் இணைத்தரப்பினர்களினதும் நலவுரித்துக்களை ஒழுங்கானதொரு விதத்தில் கையாள்வதனை வசதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Published Date: 

Monday, June 1, 2020