கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த பணவீக்கம் 2020 பெப்புருவரியில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 சனவரியின் 5.7 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2019 பெப்புருவரியில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே ஒரே காரணமாக அமைந்திருந்தது. 2020 பெப்புருவரியில் உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 14.7 சதவீதத்தில் அமைந்திருந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.8 சதவீதத்தில் பதிவுசெய்யப்பட்டது. 

ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 சனவரியின் 4.5 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 4.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் 2020 பெப்புருவரியில் 0.0 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. 0.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைத் தாக்கங்களை எதிரீடு செய்கின்ற விதத்தில் உணவல்லா வகையின் விலைகள் அதே அளவினால் அதிகரித்தன. உணவு வகையில் காய்கறிகள், அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கடல் மீன் மற்றும் சின்ன வெங்காயம் என்பனவற்றின் விலைகள் 2020 பெப்புருவரியில் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன. எனினும், போக்குவரத்து (விமானக் கட்டணங்கள்); ஆடைகள் மற்றும் காலணிகள்; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார துணை வகைகளில் காணப்பட்ட விலை அதிகரிப்புக்களின் காரணமாக உணவல்லா வகையிலுள்ள விடயங்களின் விலைகள் இம்மாதகாலப்பகுதியில் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. 

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2020 சனவரியின் 3.0 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமும் 2020 சனவரியில் 5.3 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 5.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, February 28, 2020