கற்கைகளைத் தொடர்வதற்கும் குறுகியகால விஜயங்கள் மீதும் தமது செலவுகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு நிதியங்களை அனுப்புதல்

இலங்கை மத்திய வங்கியானது, ஓய்வு மற்றும் விடுமுறை, உறவினர்களை மற்றும் நண்பர்களைச் சந்தித்தல், யாத்திரை, வியாபார நோக்கங்கள், பயிற்சி, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள், மருத்துவச் சிகிச்சைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார செயற்பாடுகள் போன்றவற்றுக்கான குறுகிய விஜயங்களுக்காகவும் அத்துடன் மாணவர் அல்லது அதற்குச் சமமான வீசாக்களிலும் வெளிநாடு சென்றுள்ள சில இலங்கையர்கள் தற்போது நிலவுகின்ற தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும் இலங்கையிலுள்ள அவர்களது குடும்பங்கள் வெளிநாடுகளிலுள்ள அத்தகைய ஆட்களுக்கு வாழ்க்கைச் செலவுகளை/ பராமரிப்புச் செலவுகளை நிறைவேற்றுவதற்கு பணம் அனுப்புவதற்கு ஆர்வமாகவுள்ளனர் என்பது பற்றியும் அறிந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்கின்றது.

  1. கற்கைகளுக்காக அல்லது மருத்துவ நோக்கங்களுக்காக வெளிநாடு சென்றுள்ள ஆட்களுக்கு பல்கலைக்கழக/ கல்வி/ பயிற்சி/ கற்கைநெறிக் கட்டணங்கள், வாழ்க்கைச் செலவுகள், மருத்துவக் கட்டணங்கள் அல்லது ஏதேனும் தொடர்புடைய கட்டணங்கள் போன்றவற்றை அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் மூலம் வழமையாக வேண்டப்படுகின்றவாறான தொடர்புடைய ஆவண ரீதியான சான்றுகளைச் சமர்ப்பிப்பதன் மீது வெளிநாட்டுச் செலாவணியில் அதிகாரமளிக்கப்பட்ட வணிகரொருவர் ஊடாக (ஏதேனும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது அனுமதியளிக்கப்பட்ட உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கி) இலங்கையிலிருந்து பணம் அனுப்புவதற்கு இலங்கையில் வதிகின்ற குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  2. அத்தகைய ஆட்கள், தனிப்பட்ட தன்மையிலான கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் அவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருக்கின்ற போது வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகளுக்காக அல்லது பண மீளப்பெறுகைகளுக்காக/ பண முற்பணங்களை  பெற்றுக்கொள்வதற்காக அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அவர்களது கடன், பற்று (ஏரிஎம்) மற்றும் வெளிநாட்டு பயண அட்டைகளையும் பயன்படுத்த முடியும்.
  3. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு பயண நோக்கங்களுக்காக வழங்கப்படும் வெளிநாட்டு நாணயத் தாள்களின் உயர்ந்தபட்ச வரையறையினைக் குறைத்தல், மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் மீது வெளிமுக பணவனுப்பல்கள் மீதான கட்டுப்பாடுகள் போன்ற செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைத் தளர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட அண்மைய வழிமுறைகள் மேலே குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு கல்வி, மருத்துவம் மற்றும் குடும்ப வாழ்க்கைச் செலவுகள் உள்ளடங்கலாக நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்களுக்கான பணவனுப்பல்கள்/ கொடுப்பனவுகள் மீது எவையேனும் கட்டுப்பாடுகளை விதிக்காது.

அதற்கமைய, இக்கட்டான இக்காலகட்டத்தில் தற்போது வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள்  தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மேலே குறிப்பிடப்பட்ட வகைகளுக்கு ஏதேனும் மேலதிக நிதியியல் உதவியினை வழங்குவதற்கு தடையெதுவுமில்லை என்பதனை இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது. எவ்வாறாயினும், இச்சந்தர்ப்பத்தை பொறுப்புடன் பயன்படுத்திக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினர்களையும் நாம் கோருகின்றோம்.

Published Date: 

Monday, April 20, 2020