இலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது

2020 மே 06 அன்று நடைபெற்ற தனது விசேட கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, தற்போதைய நாணயக்கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வு செய்து, 2020 மே 06 அன்று வியாபாரம் முடிவுறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நாணயச்சபையானது, மந்தமான பணவீக்க அழுத்தங்கள் காணப்படுகையில் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) உலகளாவிய நோய்த்தொற்றினால் விளைவிக்கப்பட்ட பாதகமான பொருளாதார தாக்கங்களினை சரி செய்வதற்கு பொருளாதாரத்திற்கு மேலும் ஆதரவளிப்பதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது. இந்த தீர்மானத்துடன், சந்தையில் நாணய நிலைமைகளை இலகுபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஏனைய வழிமுறைகளுக்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் 2020ம் ஆண்டில் இதுவரையில் 150 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ள.
 
இதுவரையான ஆண்டுகாலப்பகுதியில் நாணயக்கொள்கை மற்றும் நாணய நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட தொடர்ச்சியான வழிமுறைகளுக்கு இசைந்து செல்லும் விதத்தில் சந்தை கடன்வழங்கல் வீதங்கள் வீழ்ச்சியடையவில்லை என்பதனை நாணயச்சபையானது ஏமாற்றத்துடன் கவனத்திற்கொள்கின்றது. ஆகையால், நிதியியல் நிறுவனங்கள் மேலும் காலதாமதமின்றி கடன்வழங்கல் வீதங்களினை குறைக்குமாறு வலியுறுத்தப்படுவதுடன், தவறும் சந்தர்ப்பத்தில் இலங்கை மத்திய வங்கியானது சந்தை கடன்வழங்கல் வீதங்களினை கீழே கொண்டு வருவதற்கு பொருத்தமான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கையினை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படும்.
நாணயக் கொள்கை தீர்மானம்: கொள்கை வீதங்கள் 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்படுகின்ற
துணைநில் வைப்பு வசதி வீதம் 5.50%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 6.50%
வங்கி வீதம் 9.50%
நியதி ஒதுக்கு விகிதம் 4.00% (மாற்றமில்லை)

 

குறிப்பு: அட்டவணைப்படுத்தப்பட்டவாறு 2020 மே 21 அன்று எவ்வித நாணயக் கொள்கை அறிவிப்பும் காணப்படாது. எவ்வாறாயினும், நாணயச் சபையானது பொருளாதார மற்றும் சந்தை அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு தேவைப்படுமிடத்து இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வுக்குட்படுத்தக்கூடும் என்பதுடன் அவசியமான மாற்றங்களையும் மேற்கொள்ளக்கூடும்.

 

Published Date: 

Wednesday, May 6, 2020