அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பேணும் பொருட்டு மேலதிக வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றன

கொவிட் - 19 உலகளாவிய தொற்றுநோய்ப் பரவலின் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தினைக் கருத்திற்கொண்டு, நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பேணுதல் மற்றும் வெளிநாட்டுச் செலாவணி வீதம் மீது தற்போது காணப்படுகின்ற அழுத்தத்தினைக் குறைத்தல் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், மூன்று (03) மாதங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்காக மூலதனக் கொடுக்கல்வாங்கல் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது பின்வரும் வழிமுறைகளை விதிக்கின்ற கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.

1.  இலங்கையில் வதிகின்ற ஆட்களினால் வெளிமுக முதலீட்டுக் கணக்குகள் ஊடாக பின்வருவன நீங்கலாக வெளிநாட்டு முதலீடுகளுக்காக வெளிமுகப் பணவனுப்பல்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட பொதுவான அனுமதியினை இடைநிறுத்தல்.

 

        அ) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆளொருவரிடமிருந்து முதலீட்டாளரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயக் கடன் ஒன்றிலிருந்து நிதியளிக்கப்படவுள்ள முதலீடுகள், அல்லது

ஆ) அந்நாட்டில் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாட்டினை நிறைவுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முதலீடுகள்.

2.  இலங்கையில் வதிகின்ற ஆட்களினால் வைத்திருக்கப்படும் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் அல்லது தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் ஊடாக நடைமுறைக்; கொடுக்கல்வாங்கல்கள் மீதான பணவனுப்பல்கள் தவிர்ந்த வெளிமுக பணவனுப்பல்களை இடைநிறுத்தல்.

3.  புலம்பெயர் முற்கொடுப்பனவை ஏற்கனவே கோரியுள்ள புலம்பெயர்ந்தவர்களால், மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் ரூபாய்க் கணக்குகள் ஊடாக புலம்பெயர் முற்கொடுப்பனவுகளின் கீழ் நிதியங்களை சொந்தநாட்டிற்குத் திருப்பி அனுப்புவதனை இடைநிறுத்தல்.

4.  முதல் தடவையாக புலம்பெயர் முற்கொடுப்பனவைக் கோருகின்ற புலம்பெயர்ந்தவர்களுக்கான தகைமையுடைய புலம்பெயர் முற்கொடுப்பனவினை உயர்ந்தபட்சம் ஐ.அ.டொலர் 30,000 வரை மட்டுப்படுத்தல்.

5.  பொதுவான அனுமதியில் குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை விஞ்சுகின்ற முதலீடுகளுக்காக  மேலே 1அ மற்றும் 1ஆ என்பவற்றில் குறிப்பிடப்பட்ட பிரமாணத்தினை திருப்திப்படுத்துகின்றவர்களுக்கு மாத்திரம் விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் முதலீடுகளுக்கான விசேட அனுமதியினை வழங்குவதற்கான இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அதிகாரத்தினை மட்டுப்படுத்தல்.

 

மேலே குறிப்பிடப்பட்ட கட்டுப்பாடுகள், இனங்காணப்பட்ட மூலதனக் கொடுக்கல்வாங்கல்களுக்கு மாத்திரம் ஏற்புடையதாகும் என்பதுடன் ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்கள் மீது ஏதேனும் கட்டுப்பாடுகளை விதிக்காது.

2020.04.02ஆம் திகதியிடப்பட்ட  2169/3ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட குறித்த கட்டளையினை வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வெப்தளத்தில் (www.dfe.lk) தரவிறக்கம்இன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Published Date: 

Thursday, April 9, 2020