அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நாணயக் கொள்கை

நாணயக் கொள்கை என்றால்?

நாணயக் கொள்கை என்பது விலை உறுதிப்பாட்டை அடையும் முக்கிய நோக்குடன் பொருளாதாரமொன்றிலுள்ள பணத்தின் நிரம்பல் மற்றும் செலவை (பண நிரம்பல்/ திரவத்தன்மை) மத்திய வங்கி முகாமைப்படுத்தும் செயன்முறையாகும்.

நாணயக் கொள்கையினை கொண்டு நடாத்துபவர் யார்?

இலங்கையில் நாணயக் கொள்கையினை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி இலங்கை மத்திய வங்கியாகும். நாணயச் சபையானது இலங்கையில் நாணயக் கொள்கை தீர்மானத்தினை ஆக்குகின்ற அமைப்பொன்றாகும். 

ஆளுநரினால் தலைமை வகிக்கப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு நாணயச் சபைக்கு நாணயக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு பொறுப்புடையதாகும். வளர்ந்துவரும் நாணய மற்றும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை மதிப்பிடுவதும் நாணயச் சபையின் பரிசீலனைக்காக நாணயக் கொள்கையின் பொருத்தமான நிலைபற்றி பரிந்துரைகளை மேற்கொள்வதும் நாணயக் கொள்கைக் குழுவின் முதனிலை தொழிற்பாடாகும். 

இலங்கை மத்திய வங்கியின் நடைமுறை நாணயக் கொள்கைக் கட்டமைப்பு யாது?

தற்பொழுது, இலங்கை மத்திய வங்கி, விரிவாக்கப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பொன்றினுள் அதன் நாணயக் கொள்கையினை மேற்கொண்டு நடாத்துகின்றது. நடுத்தர காலத்தில் நெகிழ்வு மிக்க பணவீக்க இலக்கிடல் அமைப்பொன்றிற்கு இலங்கை மத்திய வங்கி நகரும் வரை இடைக்கால ஒழுங்கொன்றாகக் காணப்படும் இக்கட்டமைப்பு நாணய இலக்கிடல் மற்றும் நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கிடல் இரண்டினதும் அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்விரிவாக்கப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பானது குறுகிய கால வட்டி (தொழிற்படுத்தும்) இலக்கு வீதத்தில் நேரடியாக செல்வாக்குச் செலுத்துகின்ற அதேவேளை, இடைநிலை இலக்கொன்றிற்கான அடையாளமாக பரந்த பண நிரம்பலில் வளர்ச்சி மூலம் நிலைத்திருக்கின்றமை ஊடாக நடு தனி இலக்கமட்டத்தில் பணவீக்கத்தினைப் பேணுவதற்கு முயற்சிக்கின்றது. 

நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கு என்றால் என்ன?

நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கிடலின் கீழ், பணவீக்க இலக்கினைச் சூழ பணவீக்கத்தினை நிலைப்படுத்துகின்ற அதேவேளை உண்மைப் பொருளாதாரத்திற்கான இடைத்தடங்கலினைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி நாடும். வழிகாட்டல்: 2017 மற்றும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகளில் அறிவிக்கப்பட்டவாறு, இலங்கை மத்திய வங்கி, நடுத்தர காலத்தில் நெகிழ்வுமிக்க பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பினைப் பின்பற்றும்.

அதன் நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படும் சாதனங்கள் யாவை?

நாணயக் கொள்கை சாதனங்களாக பயன்படுத்தப்படுவதற்கு இலங்கை மத்திய வங்கி பரந்த வகையிலான கருவிகளை உடமையில் வைத்திருக்கின்றது. முக்கிய சாதனங்களாக கொள்கை வட்டிவீதங்கள், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், நியதி ஒதுக்கு விகிதம் என்பன காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, வங்கி வீதம், மீள்நிதியளித்தல் வசதிகள், கொடுகடன் மீதான பண்புசார் கட்டுப்பாடுகள், வட்டிவீதங்கள் மீதான உச்சங்கள், மற்றும் தார்மீகப் பொறுப்பு என்பனவும் பயன்படுத்தப்படும். நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு பொருத்தமான சாதனங்களை தெரிவுசெய்கின்ற சுயாதீனத்தை இலங்கை மத்திய வங்கி கொண்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியினால் பயன்படுத்தப்படும் கொள்கை வட்டிவீதங்கள் யாவை?

துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன இலங்கை மத்திய வங்கியின் முக்கிய வட்டி வீதங்களாகும். இவை முன்னர் முறையே மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என அறியப்பட்டனவாகும். துணை நில் வைப்பு வசதி வீதமானது இலங்கை மத்திய வங்கியினால் வங்கித் தொழில் முறைமையில் இருந்து ஓரிரவு மிகை திரவத்தன்மையினை ஈர்ப்பதற்கான ஆரம்ப மட்ட (குறைந்தபட்ச வீதம்) வீதமாகும்.

2014 பெப்புருவரி 1 தொடக்கம் செயற்படும் விதத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணை நில் வைப்பு வசதி பிணைய உறுதி நீக்கப்பட்டது. 

துணைநில் கடன் வழங்கல் வசதி என்பது இலங்கை மத்திய வங்கியினால் வங்கித் தொழில் முறைமைக்கு ஒரிரவு திரவத்தன்மையினை செலுத்துவதற்கான உச்சவீதமாகும் (உயர்ந்தபட்ச வீதம்).  

துணைநில் வீத வீச்சு என்றால் என்ன?

துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமும் கொள்கை வீத வீச்சு எனவும் அறியப்படுகின்ற துணைநில் வீத வீச்சினை உருவாக்குகின்றன. துணைநில் வைப்பு வசதி வீதமானது குறைந்த மட்டமாகவும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது உயர்ந்த மட்டமாகவும் இருக்கின்றன. இவ் ஆரம்ப வீதத்திற்கும் உச்சவீதத்திற்குமான மாற்றங்கள் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலையின் மாற்றங்களை குறித்துக் காட்டுகின்றன. துணை நில் வீத வீச்சானது குறுகிய கால சந்தை வட்டிவீதங்களில் பாரியளவு தளம்பல்களின் சாத்தியத் தன்மையினை மட்டுப்படுத்துவதுடன் நாணயக் கொள்கையின் நடப்பு தொழிற்படுத்தல் இலக்காக காணப்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணச் சந்தை வீதத்தினை பொருத்தமான மட்டங்களில் பேணுவதற்கு உதவுகின்றது. 

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்றால் என்ன?

திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் என்பது இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைக்கு அமைவாக சந்தைத் திரவத் தன்மையினைப் பொருத்தமான மட்டங்களில் பேணுவதற்காக ஏற்றுக்கொள்ளத்தக்க பிணையங்களைப் பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படுகின்ற சந்தை அடிப்படையில் அமைந்த நாணயக் கொள்கை தொழிற்பாடுகள் ஆகும். இந்நோக்கத்திற்காக இலங்கை மத்திய வங்கியானது அரசாங்க அல்லது அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட பிணையங்களையும் இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான பிணையங்களையும் பயன்படுத்தலாம். 

ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவின் வகிபாகம் என்ன?

ஆர்வலர் ஈடுபாட்டுக் குழு தலைசிறந்த தொழில்சார் நிபுணர்;கள், கல்வியலாளர்கள் மற்றும் தனியார் துறை ஆளணியினர் உள்ளடங்கலாக பல்தரப்பட்ட ஆர்வலர்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தின் நாணய மற்றும் நிதியியல் துறைகளின் அபிவிருத்தி உள்ளடங்கலாக ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு பொருளாதார நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு தொடர்பில் தனியார் துறையினதும் கல்வியலாளர்களினதும் அபிப்பிராயங்களையும் எண்ணப்பாங்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இவ் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் முதன்மை வகிபாகமாகும். மேலும், இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படும் கொள்கைசார்ந்த வழிமுறைகள் மீது பொருளாதார ஆர்வலர்களின் நோக்கிலிருந்து பின்னூட்டலை வழங்குவதற்கு ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதுடன் இதனூடாக மிகவும் ஆலோசனைபெற்ற விதத்தில் சிறந்த கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினை இயலச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையிலுள்ள முக்கிய நாணயக் கூட்டுக்கள் யாவை?

இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணய கூட்டுக்களின் முக்கிய வரைவிலக்கணம் பின்வருமாறு;

  1. ஒதுக்குப்பணம்/ நாணயத் தளம் - செலுத்த வேண்டிய நாணயத்தினை (பொதுமக்கள் மூலம் வைத்திருக்கப்படும் நாணயமும் வணிக வங்கிகளுடனான நாணயமும்), இலங்கை மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான அரசாங்க முகவராண்மைகளின் வைப்புக்களை உள்ளடக்குகின்றது.
  2. ஒடுங்கிய பணம் (M1) - பொதுமக்களால் வைத்திருக்கப்படும் நாணயத்தையும் வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கேள்வி வைப்புகளையும் உள்ளடக்குகின்றது.
  3. விரிந்த பணம் (M2) - ஒடுங்கிய பண நிரம்பலையும் வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகளையும் உள்ளடக்கப்படுகின்றது.
  4. விரிந்த பணம் (M2b) - ஒடுங்கிய பண நிரம்பல்;, வணிக வங்கிகளில் பொதுமக்களால் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகள் என்பவற்றை  உள்ளடக்கப்படுவதுடன் வணிக வங்கிகளின் வெளிநாட்டு நாணய வைப்புளின் ஒரு பகுதியினையும் உள்ளடக்குகின்றது.
  5. விரிந்த பணம் (M4) - விரிந்த பணம் (M2b) நிரம்பல் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் மூலம் வைத்திருக்கப்படும் கால மற்றும் சேமிப்பு வைப்புகள் என்பவை உள்ளடக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் (AWCMR) என்பது வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணக் கொடுக்கல்வாங்கல்களினதும் வர்த்தக வங்கிகளுக்கிடையிலான ஓரிரவு பிணையமளிக்கப்படாத கொடுக்கல்வாங்கல்களினதும் சராசரி நிறையேற்றப்பட்ட வீதமாகக் காணப்படுவதுடன், இது இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகச் செயற்படுகின்றது. 

இலங்கை வங்கிகளுக்கிடையில் முன்வைக்கப்பட்ட வீதம் (SLIBOR) என்றால் என்ன?

இலங்கை வங்கிகளுக்கிடையில் முன்வைக்கப்பட்ட வீதம் என்பது அழைப்புப் பணச் சந்தையில் வேறுபட்ட முதிர்ச்சிகளுக்காக நிதியங்களை வழங்குவதற்கு அவர்கள் விரும்புகின்ற தெரிவுசெய்யப்பட்ட வணிக வங்கிகள் மூலம் குறிக்கப்படும் வட்டி வீதங்களின் சராசரியொன்றாகும். இவ்விலைக் குறிப்பீடுகளின் அடிப்படையில், 1 நாள், 7 நாட்கள், 1 மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் முதிர்ச்சிகளுக்காக இலங்கை வங்கிகளுக்கிடையிலான முன்வைக்கப்பட்ட வீதம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்பட்டு நாளாந்தம் வெளியிடப்படுகின்றது. இலங்கை வங்கிகளுக்கிடையிலான முன்வைக்கப்பட்ட வீதம் என்பது குறிகாட்டிப் பணச் சந்தை வீதமாகும். 

சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் (AWLR) என்றால் என்ன?/சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம் (AWPR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம் என்பது தனியார் துறைக்கு வணிக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து நிலுவையாக உள்ள கடன்களினதும் முற்பணங்களினதும் வட்டி வீதங்களின் அடிப்படையில் மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதமானது வாரத்தின் போது தமது முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வணிக வங்கியின் கடன்வழங்கல் வீதங்களின் அடிப்படையில் வாராந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (AWDR) என்றால் என்ன?/ சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (AWFDR) என்றால் என்ன?

சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (AWDR) என்பது வர்த்தக வங்கிகளின் வசமிருந்த சகல வெளிநின்ற வட்டி உழைக்கின்ற ரூபா வைப்புக்களினதும் நிறையேற்றப்பட்ட சராசரி வீதங்களின் அடிப்படையில் மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது. 
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமும் (AWFDR) வர்த்தக வங்கிகளின் வசமிருந்த சகல வெளிநின்ற வட்டி உழைக்கின்ற ரூபா தவணை வைப்புக்களினதும் நிறையேற்றப்பட்ட சராசரி வீதங்களின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் கணிக்கப்படுகின்றது.

சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் (AWNDR) என்றால் என்ன?/சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (AWNLR) என்றால் என்ன? 

சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமானது (AWNDR) ஒரு மாத காலப்பகுதியின் போது வணிக வங்கிகளில் வைக்கப்பட்ட அனைத்து புதிய வட்டியுடைய வைப்புகளினதும் தொடர்புடைய வட்டி வீதங்களைக் உள்ளடக்குகின்றது. 
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம் (AWNLR) என்பது ஒரு மாத காலப்பகுதியின் போது வணிக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அனைத்து புதிய கடன்கள் மற்றும் முற்பணங்களினதும் வட்டி வீதங்களைக் உள்ளடக்குகின்றது. 

சட்ட ரீதியான/ சந்தை வட்டி வீதம் என்றால் என்ன?

சட்ட ரீதியான வீதமானது 1990ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க குடியியல் நடைமுறைக் கோவை (திருத்தம்) சட்டத்தின் கீழ் வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன் பணத்தொகையொன்றினை மீள அறவிடுவதற்கான ஏதேனும் நடவடிக்கைக்கு ஏற்புடையதாகும். சந்தை வீதமானது 1990ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க படுகடன் மீள அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இணங்கிய வட்டி வீதம் காணப்படாத வர்த்தக ரீதியான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து தோன்றுகின்ற ரூ.150,000 தொகையினை விஞ்சுகின்ற படுகடனை மீள அறவிடுவதற்காக கடன் வழங்கும் நிறுவனங்களினால் தொடுக்கப்படும் வழக்குகள் தொடர்பில் மாத்திரம் ஏற்புடையதாகும். 
ஆண்டொன்றுக்கான சந்தை வீதமும் சட்ட ரீதியான வீதமும் முன்னுறுகின்ற பன்னிரண்டு மாதங்களில் நிலவிய அனைத்து வணிக வங்கிகளினதும் மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதங்களில் சாதாரண சராசரிகளைக் கருத்திற்கொண்டு திசெம்பர் மாதத்தில் கணிக்கப்படுகின்றது.