இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை ரூ.600,000/- இருந்து ரூ.1,100,000/- இற்கு ரூ.500,000/- ஆல் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு, அத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்யும் அல்லது இடை நிறுத்தும் சந்தர்ப்பத்தில் மேலதிக நிவாரணத்தை வழங்குவதற்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, நாணயச்சபையால் உரிமங்கள் இரத்து செய்யப்பட்ட அல்லது இடைநிறுத்திவைக்கப்பட்ட சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (சி.ஐ.எவ்.எல்), த ஸ்ராண்டெட் கிறெடிற் பினான்ஸ் லிமிடெட் (ரி.எஸ்.சி.எவ்.எல்), ரி.கே.எஸ் பினான்ஸ் லிமிடெட் (ரி.கே.எஸ்.எவ்.எல்), த பினான்ஸ் கம்பனி பிஎல்சி (ரி.எவ்.சி), ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட் (ஈ.ரி.ஐ.எவ்.எல்) மற்றும் ஸ்வர்ணமஹால் பினான்சியல் சேர்வீசஸ் பிஎல்சி (எஸ்.எவ்.எஸ்.பி) ஆகிய ஆறு (6) நிதி நிறுவனங்களின் வைப்பாளர்கள் திருத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள்.








